கனம் மதிப்பிற்குரிய வாடிக்கையாளரே,
இந்த தகவலை வாசிக்கையில் நீங்கள் நல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், சுபீட்சத்துடனும் இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
அமானா வங்கியைப் பொறுத்தமட்டில் இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. வட்டிசாராத, அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட, மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளை வழங்குவதில் நாம் 15 வருட பூர்த்தியை பெருமையுடன் கொண்டாடுகிறோம். இந்த விசேட தருணத்தில், எமது பயணத்தில் ஒன்றிணைந்தவராக கைகோர்த்துள்ளமைக்காகவும், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2011 ஆகஸ்ட் 1 ஆம் திகதி எமது செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல், அமானா வங்கி சிறந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதுடன், எமது தேசம் அண்மையில் எதிர்நோக்கியிருந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியையும் வெற்றிகரமாக கடந்திருந்தது. வாடிக்கையாளர்களின் ஒப்பற்ற நம்பிக்கை, அங்கீகாரம் மற்றும் ஆதரவு ஆகியவற்றினால் வழிநடத்தப்படும் நிலையில், 500,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை நாம் கொண்டுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு தடங்கல்களில்லாத சேவைச் சிறப்பம்சத்தை வழங்குவதிலும், குறிப்பாக சவாலான காலங்களில் உண்மையான அக்கறையை வெளிப்படுத்துவதிலும் நாம் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, இந்த நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும், நாட்டின் மிகவேகமாக வளர்ந்து வரும் வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை நிலைநிறுத்துவதற்கும் முக்கிய காரணியாக அமைந்தது என நான் நம்புகிறேன். ஒன்றாக இணைந்து, 200 பில்லியன் ரூபாய் மொத்த சொத்துக்களை கடந்துள்ளதுடன், 33 கிளைகள் மற்றும் 47 சுய வங்கிச் சேவை மையங்கள் அடங்கலாக 80 வாடிக்கையாளர் மையங்கள் வரை தனது சேவையை விரிவுபடுத்தி, ஒரு பலமான மற்றும் மீண்டெழும் திறன்மிக்க நிறுவனத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். அத்துடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய முன்னேற்றத்திற்கும் அர்த்தமுள்ள வகையிலான பங்களிப்பையும் வழங்கி வருகிறோம்.
வங்கிச் சேவைகளை அனுபவிக்காத மற்றும் போதிய வங்கிச் சேவைகளைப் பெறாத சமூகங்களுக்கு வங்கிச் சேவைகளை இலகுவில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான நமது முயற்சிகளுக்கு வழிகாட்டும், நிதி உள்ளடக்கம் நமது நோக்கத்தின் மையப் பொருளாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. நாடு தழுவிய நிதியறிவுத் திட்டங்கள் மற்றும் தங்கச் சான்றிதழ் நிதியளிப்பு, சிறு சொத்து நிதியளிப்பு போன்ற உள்ளடக்க அடிப்படையிலான தீர்வுகளின் ஊடாக, முறைசார் நிதி அமைப்பில் தனிநபர்களும் குடும்பங்களும் முழுமையாகப் பங்கெடுப்பதற்கு நாம் தொடர்ந்து வலுவூட்டி வருகிறோம்.
நாம் நமது சேவைகளை விரிவுபடுத்துவதனூடாக, வாடிக்கையாளர்களிடையே சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வலுவான நிதியியல் செயற்பாடுகளின் தொடர்ச்சியான தடம் நமது வளர்ச்சிக்குக் பக்கபலமாக இருந்துள்ளது. இது, பலமான மற்றும் ஆரோக்கியமான சொத்துப்பொறுப்புக் கூற்றைப் பராமரிக்கும் அதேவேளையில், நிலையான இலாபத்தன்மையையும் பங்குதாரர்களுக்கான பங்கிலாபங்களையும் தொடர்ந்து வழங்க நமக்கு வழிவகுத்துள்ளது.
நமது முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் வகையில் பல உள்நாடு மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றமைக்காக நாம் பெருமிதமடைகிறோம். ஆரம்பத்தில் Global Finance Magazine USA மூலம் “உலகின் மிகச் சிறந்த வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கி” எனப் பெயரிடப்பட்டது முதல், அண்மைக்காலத்தில் The Asian Banker மூலம் “உலகின் மிகப்பலமான 50 இஸ்லாமிய வங்கிகளுள்” ஒன்றாகத் தரப்படுத்தப்பட்டமை வரையிலும், Islamic Development Bank Group இனால் சர்வதேச ரீதியில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள 30 நிறுவனங்களினுள், “ICD முதலீட்டைப் பெற்ற நிறுவனங்களில் அதிகம் தாக்கத்தைக் கொண்டுள்ள நிறுவனம்” ஆக நாம் கௌரவிக்கப்பட்டுள்ளமை வரை சகல கௌரவிப்புகள் மற்றும் விருதுகள் எமது பலமான முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளன.
இலங்கையின் வங்கித் துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், PwC நிறுவனத்தினால் மத்தியஸ்த்தம் வகிக்கப்படும் ICC Emerging Asia Banking Awards விழாவில், தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் 'இலங்கையின் சிறந்த வங்கி'யாக நாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். இலங்கையின் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையில் நமது முன்னோடிப் பங்களிப்பையும் தலைமையையும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில், Islamic Finance Forum South Asia (IFFSA) Awards விழாவில் 'தசாப்தத்தின் சிறந்த வங்கி' எனப் பெயரிடப்பட்டமை உட்படப் பல விருதுகளும் அங்கீகாரங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அத்துடன், IFFSA Awards மற்றும் Sri Lanka Islamic Banking and Finance Industry (SLIBFI) Awards ஆகிய இரு விருது விழாக்களிலும் 'சிறந்த வங்கி', 'சிறந்த நிதி நிறுவனம்' மற்றும் 'சிறந்த நிதிப் பரிவர்த்தனை' ஆகிய பிரிவுகளின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் விருதுகளை நம் வசப்படுத்தியுள்ளோம்.
மேலும், நமது நிதிப் பலத்தை உறுதிப்படுத்தும் வகையில், Fitch Ratings Sri Lanka நிறுவனம், அமானா வங்கியின் நீண்டகால தேசிய முதலீட்டு மட்டத் தரவரிசையான Stable Outlook உடனான BBB- (lka) மட்டம் வரை உயர்த்தியுள்ளதுடன், Lanka Rating Agency நிறுவனத்தினால் வங்கிக்கு BBB+ தரவரிசையும் வழங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து மாற்றமடைந்து வரும் நிலையில், வசதி, அணுகல்தன்மை மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி நமது டிஜிட்டல் மாற்றப் பயணத்தை நாம் விரைவுபடுத்தியுள்ளோம். இன்று, ஒன்லைன் வங்கிச் சேவை, ஒன்லைன் கணக்கு திறப்பு, ஒன்லைன் நிதி வசதித் தளம், WhatsApp வங்கிச் சேவை, AmanaConnect App மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Digital Hub ஆகியன அடங்கலாக பல டிஜிட்டல் தீர்வுகள் போன்றன, எமது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வங்கிச் சேவைகளை நமது வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக்குவதற்கு எமது முதலீடுகள் வழிவகுப்பதுடன், எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுக்கின்றன.
தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி துறையில் நமது தனித்துவமான வங்கி முறைமை வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. தொழில்முனைவோர்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சி, நிதி உள்ளடக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றுக்கு நாம் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்து வருகிறோம்.இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதித்துவ வங்கிகளுடன் உறவுகளை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் சர்வதேச வர்த்தகத் தேவைகளை திறம்படவும் செயல்திறனுடனும் நிறைவேற்ற முடிகிறது.
வங்கிச் சேவைகளுக்கும் அப்பாற்பட்டு, நமது முதன்மையான சமூக நல்வாழ்வுத் திட்டமான OrphanCare தொடர்ந்தும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்கு 10 ஆன “சமத்துவமின்மையை குறைத்தல்” என்பதன் தூண்டுதலிலும், எவ்வித பாகுபாடும் இல்லாது உறுதியளிக்கும் சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் பிரிவு 2 இன் வழிகாட்டலிலும், OrphanCare சிறுவர் காப்பகங்களில் இருந்து வெளியேறிய பின்னர் நிதியியல் சுதந்திரத்தை நோக்கிய பயணத்தில் இலங்கை முழுவதிலும் உள்ள அனாதைச் சிறுவர்களுக்கு ஆதரவளிக்கிறது. இதன் மூலம் அவர்களை இரண்டாவது கைவிடலில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இதுவரை, நாடு முழுவதிலும் உள்ள 90 க்கும் மேற்பட்ட சிறுவர் காப்பகங்களைச் சேர்ந்த 3,200 க்கும் அதிகமான சிறுவர்கள் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பயனாளிகளின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை ஆவணப்படுத்தி, OrphanCare தனது முதலாவது தாக்க அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. இதனை www.orphancare.org எனும் இணைப்பில் பார்வையிடலாம்.
நமது இந்த மைல்கல் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில், நமது ஸ்தாபகத் தலைவர் ஒஸ்மான் காசிம் மற்றும் ஸ்தாபக இயக்குநர்களின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவத்திற்கும், தற்போதைய தலைவர் அஸ்கி அக்பரலி, பணிப்பாளர் சபை மற்றும் ஷரீஆ மேற்பார்வைக் குழு ஆகியோரின் தொடர்ச்சியான வழிகாட்டல் மற்றும் நிர்வாகத்திற்கும், நமது ஒழுங்குமுறைப்படுத்தல்கள் மற்றும் வெளிவாரி கணக்காய்வாளர்களால் வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற மேற்பார்வை மற்றும் உறுதிப்பாட்டிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன், வங்கியின் ஒவ்வொரு சாதனைகளுக்கும் முக்கிய காரணியாகத் திகழ்ந்த, தமது அர்ப்பணிப்பு, தொழில்முறைமை மற்றும் தளராத உறுதியுடன் செயற்படும் 900 க்கும் மேற்பட்ட உணர்வுப்பூர்வமான நமது சக ஊழியர்கள் அடங்கிய குழுவிற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்துக்கும் மேலாக, எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களாகிய உங்களின் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் பங்களிப்புக்காக உங்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் கொண்டாடும் ஒவ்வொரு மைல்கல்லும் அமானா வங்கி மீது நீங்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கையினாலேயே சாத்தியமானது.
இறைவனின் அருளால், நமது பயணத்தின் அடுத்த கட்டத்தை நாம் நோக்கிச் செல்லும்போது, சிறந்த சேவையை வழங்குவதிலும், புத்தாக்கங்களை வரவேற்பதிலும், வளர்ச்சியை வலுப்படுத்தி வாழ்க்கையை வளம்படுத்தும் நமது இலக்கை முன்னெடுத்துச் செல்வதிலும் நாம் தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறோம்.
எனவே தான், நாம் உங்களின் வங்கி.

மொஹமட் அஸ்மீர்
முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி
அமானா வங்கி பிஎல்சி
We use cookies that help to increase the performance of our website to serve you better, to provide social media features and to analyse our traffic. Click accept to give your consent to accept cookies and go directly to the site or click on more information to see detailed descriptions of the Privacy Policy