அமானா வங்கியின் முன்னணி சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான OrphanCare க்கு ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்துக்கான தங்க விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியமட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த IFFSA விருதுகள் 2020 இன் போது இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. தெற்காசிய பிராந்தியத்தின் வட்டிசாராத வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் மற்றும் அவற்றின் வினைத்திறன் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்ததாக காணப்பட்ட போதிலும், அமானா வங்கி OrphanCare இனால் தொடர்ச்சியாக பயன் பெறும் அநாதரவானவர்களின் கணக்குக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது 2800 க்கும் அதிகமான பயன்; பெறுநர்கள் காணப்படுகின்றனர். ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்துக்கு தங்க விருதை சுவீகரித்திருந்தமைக்கு மேலதிகமாக, OrphanCare இன் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு 2020 SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வில் சமூக மேம்பாட்டுத் திட்டத்துக்கான தங்க விருது வழங்கப்பட்டிருந்தது. மேலும், ஓமானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த IRB விருதுகள் 2019 இல் ஆண்டின், சிறந்த சமூகப் பொறுப்பு வாய்ந்த வங்கி எனும் விருதும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த விருது தொடர்பில் அமானா வங்கி OrphanCare நம்பிக்கை நிதியத்தின் தவிசாளர் ருஸ்லி ஹுசைன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது OrphanCare நிகழ்ச்சித்திட்டத்துக்காக மற்றுமொரு சர்வதேச விருதை வெற்றியீட்டியுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். அநாதரவான சிறார்களுக்கு தமது எதிர்காலத்துக்கு சிறியளவிலேனும் பங்களிப்பை வழங்கும் இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பெரும் ஊக்குவிப்பாக இந்த கௌரவிப்புகள் அமைந்துள்ளன. OrphanCare ஐ உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்வதற்கு பங்களிப்பு வழங்கும் சகல நன்கொடை வழங்குநர்கள், நலன் விரும்பிகள், வங்கி ஊழியர்கள், காப்பகங்களின் நிர்வாகத்தினர், பங்காளர்கள் மற்றும் இதர பங்காளர்கள் என அனைவருக்கும் எனது சக காப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.
அநாதரவான சிறார்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டு சுயாதீன நம்பிக்கை நிதியமாக அமானா வங்கி OrphanCare நிறுவப்பட்டது. இந்தச் சிறார்கள் 18 வயதை எய்தியதும், காப்பகத்தின் பராமரிப்பிலிருந்து வெளியேறும் போது, அவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் சிறு நிதித் தொகையை கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதியம் அமைந்துள்ளது. “இரண்டாம் கைதுறப்பு” என யுனிசெவ் அமைப்பினால் குறிப்பிடப்படும், இந்தப் பிரச்சினை, தமது சிறுபராயத்தில் கைவிடப்பட்ட அநாதரவான சிறுவர்கள் தற்போது குறித்த வயதைப் பூர்த்தி செய்து, காப்பகத்தின் பராமரிப்பிலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலையை எதிர்கொண்டுள்ள மற்றுமொரு சவாலாக அமைந்துள்ளது. அவர்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனையாக நிதியைக் கொண்டிராமை தொடர்பில் வங்கி கவனம் செலுத்தியுள்ளது. அதற்காக OrphanCare நம்பிக்கை நிதியத்தினூடாக, குறித்த அநாதரவான சிறுவர்களின் கணக்குகளில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரையில் குறிப்பிட்ட தொகை வைப்புச் செய்யப்படுகின்றது. அவர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்ததும், அந்தப் பணத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில், நிர்வாக மற்றும் செயற்பாட்டு செலவுகள் அனைத்தையும் அமானா வங்கி பொறுப்பேற்றுள்ளமையால், நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், அனுகூலம் பெறுநரைச் சென்றடைவதாகும். இந்தத் திட்டத்துக்கு அநாதரவானவர்களை தெரிவு செய்யும் போது, சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் இரண்டாம் தீர்மானமான சிறுவர்களினது அல்லது அவர்களின் பெற்றோர்களினது அல்லது அவர்களின் பாதுகாவலரின் நிறம், இனம், பாலினம், மொழி, மதம், அரசியல், தேசிய, சமூக பின்புலம், சொத்துகள், அங்கவீனம் அல்லது பிறப்பு போன்ற எவ்வித விடயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.