அமானா வங்கி, இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்துடன் (SEUSL) கைகோர்த்து, விசேட தொழிற்துறை பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக பட்டம் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்துறைக்கு தயார்ப்படுத்துவதற்கு அவசியமான திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருந்தது. வங்கியின் அறிவு சந்தைப்படுத்தல் மற்றும் நிதிசார் உள்ளடக்க அலகினால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. வட்டிசாராத வங்கியியல் முறைமையைக் கொண்ட வங்கி மற்றும் நிதியியல் துறையில் திறன் படைத்த பணியாளர் குழுவை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதுடன், உள்நாட்டு தொழிற்துறையில் திறன் கட்டியெழுப்பலுக்கான தற்போதையை தேவையை நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்துகின்றது. மாணவர்களுக்கு பிரயோகச் செயற்பாடுகள் பற்றி பயிலவும், கல்விச் செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக இடைக்கால பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கும் உதவும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருந்தது.
அமானா வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற அறிமுக பயிற்சி நிகழ்வில் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவினர்கள் பங்கேற்றிருந்தனர். இதன் போது வங்கிச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரிடமிருந்து நேரடியாக விடயங்களை பயில்வதற்கு இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருந்ததுடன், பல்வேறு சிந்தனைகளைத் தூண்டும் அமர்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் கிடைத்திருந்தது. வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் முன்னெடுத்திருந்த தகவல்கள் மற்றும் ஊக்கமளிக்கும் அமர்வுடன் இந்த நிகழ்வு முடிவடைந்தது. இதன் போது, மாற்றமடைந்து வரும் வங்கியியல் தொழிற்துறையில் தொழில்நிலையை எவ்வாறு கட்டியெழுப்புவது மற்றும் எதிர்காலத்துக்கு பொருத்தமான திறன்களை கொண்டிருப்பது என்பன தொடர்பான விளக்கங்களையும் வழங்கியிருந்தார்.
இந்த கைகோர்ப்பு தொடர்பில் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “எமது எதிர்கால தலைமுறையினருக்கு திறன் விருத்திக்கான வழிகோலுனர்கள் எனும் வகையில், இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தொழிற்துறைசார் பயிற்சி நிகழ்ச்சியை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் பங்கேற்க முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரி தொடர்பில் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியிருந்தது. சந்தையில் காணப்படும் நவீன வங்கியியல் செயற்பாடுகள் மற்றும் போக்குகள் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவது முக்கியமானதாகும். எதிர்காலத்துக்கு தயாரான அதிகளவு திறன்கள் படைத்த மனித வளங்களை கட்டியெழுப்புவதில் இந்தப் பயிற்சி முக்கிய பங்காற்றும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.
இந்த தொழிற்துறைசார் பயிற்சி தொடர்பில் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் பிரிவின் விரிவுரையாளரான கலாநிதி. ரிபாஸ் அபு ஹுரைரா கருத்துத் தெரிவிக்கையில், “பிரயோக விடயங்கள் தொடர்பில் எமது மாணவர்களுக்கு புரிந்து கொள்வதற்கு இது சிறந்த அனுபவமாக அமைந்துள்ளது. தொழிற்துறையில் திறன் படைத்த வங்கியியல் நிபுணர்களை கட்டியெழுப்புவதற்கு உதவியாக அமைந்திருக்கும். எமது மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியமைக்காகவும், அவர்களின் தொழில்நிலைகளை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு வழிகாட்டிகளாக அமைந்தமைக்காகவும், நாம் அமானா வங்கிக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
படத்தின் தலைப்பு : அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி, இம்தியாஸ் இக்பால், மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகின்றார்.