முற்பணங்கள் 16% வளர்ச்சியுடன் ரூ. 100 பில்லியன் மைல்கல்லை கடந்தது
அமானா வங்கி, 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 9 மாத காலப்பகுதியில், ரூ. 1.98 பில்லியன் வரிக்கு முந்திய இலாபத்துடன் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 1.68 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 18% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 1 பில்லியனை கடந்து, ரூ. 1.12 பில்லியனாக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதி முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 891 மில்லியனாக பதிவாகியிருந்தது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வங்கியியல் துறையில் நிதியளிப்பு வீதங்கள் வீழ்ச்சியடையும் நிலையில், வங்கியின் நிதியளிப்பு வருமானம் ரூ. 11.70 பில்லியனாக காணப்பட்டது. எவ்வாறாயினும், 4.1% எனும் உறுதியான நிதியளிப்பு எல்லைப் பெறுமதியை வங்கி பேணியிருந்ததுடன், தேறிய நிதியளிப்பு வருமான வளர்ச்சியாக 6% ஐ பதிவு செய்து ரூ. 5.13 பில்லியனை எய்தியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இப்பெறுமதி ரூ. 4.85 பில்லியனாக காணப்பட்டது.
வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 6.50 பில்லியனாக காணப்பட்டது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 4% இனால் எல்லையளவில் வீழ்ச்சியடைந்திருந்தது. துரித மீட்சி பொறிமுறை அமுலில் இருந்ததுடன், புதுப்பிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஈடுபாட்டுடன், வங்கியினால் மதிப்பிறக்க கட்டணங்களை 73% இனால் குறைத்துக் கொள்ள முடிந்திருந்தது. மேலும், இது தேறிய தொழிற்பாட்டு வருமானம் ஒப்பீட்டளவில் 16% இனால் அதிகரித்து ரூ. 6.11 பில்லியனாக பதிவாகியிருந்தமைக்கு பங்களிப்புச் செய்திருந்தது. தொழிற்பாட்டு செலவீனங்களில் அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், வங்கி ஆரோக்கியமான வருமானத்தின் மீதான செலவு விகிதத்தை 53% ஆக பேணியிருந்தது. நிதிச் சேவைகள் மீது பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்கு முன்னரான தொழிற்படு இலாபம் ஒப்பீட்டளவில் 6% வளர்ச்சியை பதிந்து, ரூ. 2.69 பில்லியனை எய்தியிருந்தது. வங்கியின் திரண்ட வரிப் பங்களிப்பு சுமார் ரூ. 1.57 பில்லியனாக காணப்பட்டதுடன், வங்கியின் வரிக்கு முந்திய மொத்த தொழிற்படு இலாபத்தில் 58% பங்கை கொண்டிருந்தது. இக்காலப்பகுதியில் மொத்த பரந்த வருமானம் ரூ. 1.10 பில்லியனாகும். இது ஒப்பீட்டளவில் 24% வளர்ச்சியை காண்பித்திருந்தது.
வட்டிசாராத வங்கியியல் மாதிரிக்கான கேள்வி அதிகரித்திருந்ததை தொடர்ந்து, வங்கியின் முற்பணங்கள் மற்றும் வைப்புகள் பிரிவு 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 9 மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் வங்கியியல் வழிமுறையை ஊக்குவித்து, வாடிக்கையாளர் முற்பணங்கள் 16% இனால் அதிகரித்து ரூ. 15 பில்லியனால் உயர்ந்து ரூ. 104.42 பில்லியனை எய்தியிருந்தது. அத்துடன் தொழிற்துறையின் குறைந்த நிலை 3 மதிப்பிறக்க விகிதமான 1.4% ஐ பேணியிருந்தது. ஆரோக்கியமான 9 மாத கால வளர்ச்சியை பதிவு செய்து, வங்கியின் வாடிக்கையாளர் வைப்புகள், மூன்றாம் காலாண்டில் ரூ. 145.72 பில்லியனாக காணப்பட்டது. உறுதியான CASA விகிதமான 42.3% ஐ பேணியிருந்ததுடன், தொழிற்துறையில் முன்மாதிரியானதாக திகழ்ந்தது. வங்கியின் மொத்த சொத்துகள் ரூ. 172.52 பில்லியனாக காணப்பட்டதுடன், பங்கொன்றின் மீதான தேறிய சொத்துப் பெறுமதி ரூ. 41.40 ஆக முன்னேறியிருந்தது. முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் பதிவாகியிருந்த சிறந்த பெறுபேறுகளினூடாக, வங்கியின் ROE மற்றும் ROA ஆகியன முறையே 6.7% மற்றும் 1.6% ஆக காணப்பட்டன. 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று, அமானா வங்கியின் பொது பங்கு நிலை 1 மற்றும் மொத்த மூலதன விகிதங்கள் போன்றன முறையே 15.5% மற்றும் 18.1% ஆக காணப்பட்டன. இவை ஆகக்குறைந்த ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடான 7% மற்றும் 12.5% என்பதை விட உயர்வாகும்.
மூன்றாம் காலாண்டு பகுதியில், ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ஸ்ரீ லங்காவினால் அமானா வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலை BB+(lka) இலிருந்து முதலீட்டு தர தரப்படுத்தலான BBB-(lka) என்பதற்கு உயர்த்தியிருந்ததுடன், உறுதியான புறத்தோற்றத்தையும் வழங்கியிருந்தது. அதனூடாக வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு பல்வேறு வாய்ப்புகள் திறந்திருந்தன. வங்கி அண்மையில் தனது தொடர்ச்சியான 7ஆவது பங்கிலாப வெளியீடு அறிவிப்பையும் மேற்கொண்டிருந்தது. இதுவரையில் வழங்கப்பட்ட மிகவும் உயர்ந்த பங்கிலாப வழங்கலான ரூ. 661 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட பங்கிலாப பெறுமதியின் இரண்டு மடங்காக இது அமைந்திருந்தது.
அமானா வங்கியின் ஒன்பது மாத கால நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “முழு நாட்டின் கவனமும் ஜனாதிபதி தேர்தலில் மூழ்கியிருந்த காலாண்டுப் பகுதியில், சவால்கள் நிறைந்த சூழலிலும் அமானா வங்கி மீண்டும் தனது மீட்சியை வெளிப்படுத்தி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. பணிப்பாளர் சபை சார்பாக, வங்கியின் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்துக்காக பங்களிப்பு வழங்கிய எமது பெறுமதி வாய்ந்த பங்காளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.
அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் அமானா வங்கி பதிவு செய்திருந்த உறுதியான நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் நாம் மிகவும் திருப்தியடைகின்றோம். அதனூடாக வங்கியின் மீட்சி மற்றும் நிலைபேறான வளர்ச்சியை எய்தும் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமானா வங்கியின் அபிவிருத்தியின் மீதான நோக்கு மற்றும் மக்களுக்கு நட்பான வங்கியியல் வழிமுறை போன்றவற்றுடன், இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் வினைத்திறனான நடவடிக்கைகள் போன்றன சவால்கள் நிறைந்த சந்தைச் சூழலை கடந்து வரவும், மீண்டும் பங்காளர்களுக்கு பெறுமதி சேர்க்கவும் எமக்கு உதவியிருந்தன. எம்மீது தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் உறுதியை கொண்டு ஆதரவளிக்கும் தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், முகாமைத்துவம், ஊழியர்கள், பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இந்த ஊக்கத்துடன், 2024 ஆம் ஆண்டை நாம் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
Image Captions: அஸ்கி அக்பராலி – தவிசாளர் ,மொஹமட் அஸ்மீர் – முகாமைத்துவ பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி