A- A A+
தேடுதல்
  • Amãna Bank PLC Blog Detail - Main Visual

இந்திய ரூபாயில் இரு தரப்பு வியாபார செயற்பாடுகளை முன்னெடுக்க அமானா வங்கி வசதியளிக்கின்றது

அமானா வங்கி September 18, 2023

ஒப்பற்ற மற்றும் வினைத்திறனான சர்வதேச வியாபார அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில், இந்திய ரூபாவில் நேரடியாக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடக்கூடிய வியாபார நாளிகையை அறிமுகம் செய்துள்ளதாக அமானா வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் அனுமதியளிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தின் பிரகாரம், இந்திய ரூபாவை அந்நிய நாணய கொடுப்பனவாக ஏற்றுக் கொள்ளும் முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், சார்க் பிராந்தியத்தினுள் புதிய வர்த்தக யுகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிமுகத்துடன், வாடிக்கையாளர்களுக்கு தமது வியாபார கொடுக்கல் வாங்கல்களை இந்திய ரூபாவில் நேரடியாக மேற்கொள்ள முடியும். இதனால் நாணயங்களுக்கிடையிலான அந்நியச் செலாவணி இழப்புகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதுடன், நாட்டில் மட்டுப்படுத்தப்பட்டளவில் கையிருப்பிலுள்ள அமெரிக்க டொலர் இருப்புகளை பேணக்கூடியதாகவும் இருக்கும். புதிய நாளிகையை பின்பற்றி, வாடிக்கையாளர்களுக்கு தமது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொடுக்கல் வாங்கல்களுக்காக LCகள் மற்றும் முற்பணங்களை சௌகரியமாக மேற்கொள்ளும் வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பில் எமது வியாபார வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இந்தியா அமைந்துள்ளது. இந்திய ரூபாவை நேரடியாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையானது, இரு நாடுகளுக்கிடையே வியாபாரங்களை மேம்படுத்த உதவியாக அமைந்திருப்பதுடன், இந்திய சந்தையில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை கைப்பற்றி வியாபாரங்களை கட்டியெழுப்புவதற்கு ஏதுவாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.

சர்வதேச வியாபாரங்களுக்கு வங்கியின் ஆதரவு தொடர்பில் இம்தியாஸ் கருத்துத் தெரிவிக்கையில், “அண்மைய பொருளாதார நெருக்கடியின் போது, அமானா வங்கியினால் அவசர மருந்துப் பொருட்கள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு ஆதரவளிக்கப்பட்டிருந்தது. எமது இந்திய ரூபாய் வியாபார நாளிகையினூடாக, அவ்வாறான வியாபார செயற்பாடுகளுக்கு வளர்ச்சியடைய மாத்திரம் உதவுவது மட்டுமன்றி, அனைத்து இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை பேணவும் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

இந்திய ரூபாய் கணக்கு நிறுவப்பட்டமை தொடர்பில் அமானா வங்கி திறைசேரி மற்றும் நிதிச்சேவைகள் பிரிவின் தலைமை அதிகாரி ஹரிந்திர ஒபேசேகர கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் அமானா வங்கியினால் பிரதான சர்வதேச நாணயங்களில் சர்வதேச வியாபாரங்களை முன்னெடுப்பதற்கு வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. தற்போது இலங்கை மத்திய வங்கியினால் இந்திய ரூபாயை அனுமதியளிக்கப்பட்ட சர்வதேச நாணயமாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்திய ரூபாய் கணக்கை நிறுவி, எமது வாடிக்கையாளர்களுக்கும், அவர்களின் பங்காளர்களுக்கும் சௌகரியமான வியாபார நாளிகையை ஏற்படுத்திக் கொடுத்து ஆதரவளிக்க நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் பெறுபேறாக வங்கியின் சர்வதேச வியாபாரம் என்பது 11 நாணயங்களில் முன்னெடுக்கப்படுவதுடன், 60க்கும் மேற்பட்ட தொடர்பாடல் வங்கிகளுடன் பங்காண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் வியாபார மற்றும் விநியோக சங்கிலி நிதி நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

Featured

Open Online Account
My Hajj
2026
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp