WindForce PLC இனால் நிறுவப்பட்டுள்ள 10 MW கெப்பத்திகொல்லேவ சூரிய வலுத் திட்டத்துக்கு நிதிவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்ததில் ஈடுபாட்டைக் கொண்டிருந்தமை தொடர்பில் அமானா வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது. முழுமையாக பெண்கள் தொழினுட்ப அணியினால் இந்த திட்டம் இயக்கப்படுவதுடன், இலங்கையில் இவ்வாறு இயங்கும் முதலாவது சூரிய மின் வலுப் பிறப்பாக்கல் திட்டமாகவும் அமைந்துள்ளது.
அனுராதபுர மாவட்டத்தின், ஹதகல, கெப்பத்திகொல்லேவ பகுதியில் அமைந்துள்ள இந்த சூரிய மின்வலுப் பிறப்பாக்கல் திட்டம், 35 ஏக்கர் பகுதியில் அமைந்திருப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் 20.24 GWh தூய வலுவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிறப்பிக்கப்படும் வலு, புதிய 12 கிலோமீற்றர் மின்வடத்தினூடாக கடத்தப்படுவதுடன், கெப்பத்திகொல்லேவ கான்ட்ரியிலுள்ள மின்பிறப்பாக்கல் ஆலை முதல் வவுனியா உப மின்விநியோக நிலையத்துடன் இணைக்கப்பட்டு, இலங்கையின் தேசிய மின்விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பசுமையான வலு மற்றும் தொழினுட்ப ரீதியில் முன்னெடுக்கப்படும் புதுப்பிக்கத்தக்க வலுப் பிரிவில் பெண் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதில் இந்தத் திட்டம் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தொழினுட்ப அணியைச் சேர்ந்த அனைவரையும் பெண்களாக கொண்டிருப்பது எனும் WindForce PLC இன் தீர்மானத்தினூடாக, தூய வலுத் தீர்வுகளை முன்னெடுத்துச் செல்வதில் பெண்கள் ஆற்றும் முக்கிய பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பசுமையான தேசிய மின்விநியோக கட்டமைப்புக்கான அர்ப்பணிப்பை அமானா வங்கி வெளிப்படுத்தி, சூரிய, நீர், பயோமாஸ் மற்றும் காற்றாலை மின் பிறப்பாக்கல் திட்டங்கள் பலதுக்கு நிதிவசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஹொரண சூரிய மின்வலுப் பிறப்பாக்கல் ஆலையும் அடங்கியுள்ளது.
இந்தப் பங்காண்மை தொடர்பில் அமானா வங்கியின் வணிக வங்கியியல் உப தலைவர் இர்ஷாத் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “கெப்பத்திகொல்லேவ சூரிய மின்பிறப்பாக்கல் திட்டத்துக்கு ஆதரவளித்திருந்தமையானது, புதுப்பிக்கத்தக்க வலு மற்றும் இலங்கையில் நிலைபேறான வளர்ச்சி போன்றவற்றுக்கான அமானா வங்கியின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. பசுமையான மின் வழங்கல் கட்டமைப்புக்கு வலுவூட்டுவதற்கு மாத்திரம் இந்தத் திட்டம் உதவுவதாக அமைந்திராமல், பிரதான தொழிற்துறையில் பெண்களின் வலுவூட்டலை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது. இவ்வாறான திட்டத்தில் அங்கம் பெறுவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். தூய மற்றும் பசுமையான எதிர்காலத்துக்கு அமானா வங்கி தொடர்ந்தும் பங்களிப்பை வழங்குவதுடன், அதனூடாக சூழலுக்கும் சமூகத்துக்கும் அனுகூலமளிக்கும் வகையில் செயலாற்றும்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
இடமிருந்து: பொறியியலாளர். எல். எச். ரஞ்சித் சேபால (இலங்கை பேண்தகு வலு அதிகாரசபையின் தவிசாளர்), லலித் ஹேவாகம (பிரதி பொது முகாமையாளர் – Corporate Finance of Wind Force PLC), மஞ்சுள பெரேரா (முகாமைத்துவ பணிப்பாளர் - Wind Force PLC), ருசிரி கூரே (பிரதம நிதியியல் அதிகாரி - Wind Force PLC), இர்ஷாத் இக்பால் (உப தலைவர் – வணிக வங்கியியல், அமானா வங்கி பிஎல்சி), ராஜேந்திர ஜயசிங்க (உதவி உப தலைவர் – கூட்டாண்மை திட்டமிடல், அமானா வங்கி பிஎல்சி), சமிளா பொத்துபிட்டிய (வாடிக்கையாளர் உறவு பேண் முகாமையாளர் – வியாபார வங்கியியல் பிரிவு, அமானா வங்கி பிஎல்சி).