மாற்று நிதியியல் நிறுவகங்களின் சம்மேளனம் (AAFI), அமானா வங்கியுடன் இணைந்து, பொது மக்கள் மத்தியில் வட்டிசாராத இஸ்லாமிய நிதிச் சேவைகள் அல்லது மாற்று நிதித் தீர்வுகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வெபினார் தொடரின் அறிமுக நிகழ்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இஸ்லாமிய நிதிச் சேவைகளின் கொள்கைகள், செயன்முறைகள் மற்றும் அனுகூலங்கள் பற்றி பரிபூரண புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்த வெபினார் தொடர் முக்கிய பங்காற்றும்.
“நிதியளிப்பு அடிப்படையிலான பங்காண்மை” எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிமுக நிகழ்வு, மெய்நிகரான முறையில் நடைபெற்றதுடன், இதில் விளக்கங்கள் மற்றும் குழுநிலை கலந்துரையாடல் போன்றன அடங்கியிருந்தன. நிதிச் சேவைகள் துறையில் பல ஆரம்பநிலை நிறுவனங்களை நிறுவுவதில் புகழ்பெற்றிருந்த AAFI இன் தலைவர் ரவி அபேசூரிய இதில் பேச்சாளராக பங்கேற்றிருந்ததுடன், இதனை இலங்கையின் KPMG நிறுவனத்தில் வரி மற்றும் ஒழுங்குபடுத்தல் பிரதம அதிகாரியாகவும், AAFI இன் செயலாளராகவும் திகழும் ரிஃப்கா சியார்ட் நெறியாள்கை செய்திருந்தார். அமானா வங்கியின் சார்பாக, அறிவு சந்தைப்படுத்தல் மற்றும் நிதி உள்ளடக்கப்பிரிவின் முகாமையாளர் முஆத் முபாரக் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார்.
இந்த அமர்வின் போது, நிதியளிப்பு அடிப்படையிலான பங்காண்மை பற்றிய பிரதான விளக்கத்தை முஆத் முபாரக் வழங்கியிருந்ததுடன், தமது எளிமையான விளக்கங்களினூடாக, பங்கேற்றிருந்தவர்களுக்கு தலைப்பு பற்றிய ஆழமான அறிவை பெற்றுக் கொள்ள உதவியிருந்தார். இந்த அமர்வினூடாக, பங்கேற்றிருந்தவர்கள் பெறுமதி வாய்ந்த உள்ளார்ந்த தகவல்களைப் பெற்று அனுகூலமடைந்ததுடன், வட்டியில்லாத வங்கியியல் முறையில் எவ்வாறு பயன்பெற முடியும் என்பது பற்றி எளிமையாக அறிந்து கொண்டனர். இந்த நிதியளிப்பு முறையின் பல்வேறு பிரயோகங்கள் பற்றி இந்த அமர்வில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
அறிமுக வெபினார் தொடர்பில் AAFI இன் தலைவர் ரவி அபேசூரிய விளக்கமளிக்கையில், “பொது மக்கள் மத்தியில் மாற்று நிதியளிப்பு முறை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆரம்ப வெபினாருக்காக அமானா வங்கியுடன் கைகோர்த்திருந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். அனைத்து இலங்கையர்களுக்கும் பயனளிக்கக்கூடிய பிரத்தியேகமான வங்கியியல் மற்றும் நிதியியல் மாதிரி தொடர்பில் காணப்படக்கூடிய ஏதேனும் தவறான நம்பிக்கைகளை இல்லாமல் செய்து கொள்ளவும் இந்த வெபினார் தொடர் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.