அமானா வங்கி, வாடிக்கையாளர்களுக்கு சொகுசான மற்றும் சகாயமான வாழிடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களுக்கு நட்பான நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், மிரேகா ஹோம்ஸ் பிரைவட் லிமிடெட் உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையின் மாபெரும் பொதுப் பட்டியலிடப்பட்ட சொத்துகள் வடிவமைப்பாளரான ஓவர்சீஸ் ரியால்டி நிறுவனத்தின் துணை நிறுவனமாக மிரேகா ஹோம்ஸ் திகழ்வதுடன், ஹவ்லொக் சிற்றியின் வடிவமைப்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கைகோர்ப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கு ஹவ்லொக் சிற்றியில் காணப்படும் நிலை 3 மற்றும் 4 ஐச் சேர்ந்த சொகுசு தொடர்மனைகளில் குடியேறுவதற்கு அவசியமான கொள்வனவை மேற்கொள்வதற்கான நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 18 ஏக்கர் காணியில் காணப்படும் பசுமையான சூழல், உலகத் தரம் வாய்ந்த ஷொப்பிங் மோல் மற்றும் நவீன அலுவலகத் தொகுதி ஆகியவற்றை அனுபவிக்கவும் முடியும். இந்த உரிமையாண்மையை சாத்தியப்படுத்தும் வகையில், அமானா வங்கியினால் 3 நாட்களினுள் வாடிக்கையாளர்களின் வருமானத் திறனுக்கேற்ப மீளச் செலுத்தக்கூடிய திட்டங்களுடன் விசேட நிதிவசதிக்கு அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும், வங்கியின் மக்களின் நட்புறவுத்தன்மையை உறுதி செய்யும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு தாம் பெற்றுக் கொண்ட வீட்டு நிதி வசதியை, மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி, முன்கூட்டியே செலுத்தித் தீர்க்கும் வசதியும் வழங்கப்படுகின்றது.
அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர், நுகர்வோர் நிதியளிப்பு தலைமை அதிகாரி ரியாஸ் நூர், மிரேகா ஹோம்ஸ் பணிப்பாளர் ரால்ப் டி லனெரோல், விற்பனைகள் பொது முகாமையாளர் நிருபா பீரிஸ் மற்றும் சட்டப்பிரிவின் தலைமை அதிகாரி லக்நதி பெரேரா ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடலில் கலந்து கொண்டனர்.
அமானா வங்கியின் இந்தப் பங்காண்மை தொடர்பில் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “ஹவ்லொக் சிற்றியுடன் கைகோர்ப்பதையிட்டு அமானா வங்கி பெருமை கொள்கின்றது. அதனூடாக, இலங்கையின் வளர்ந்து வரும் சொகுசு தொடர்மனை சந்தையில் சொத்துக்களின் மீதான முதலீட்டுக்கு வசதி வாய்ப்பளிப்பதற்கான எமது அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, நவீன வசதிகள் படைத்த தொடர்மனை ஒன்றின் உரிமையாளராகும் எமது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான தீர்வுகளை துரிதமாக பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளதுடன், அதனூடாக எமது நட்பான வங்கித் தீர்வுகளை அனுபவிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
மிரேகா ஹோம்ஸ் பணிப்பாளர் ரால்ப் டி லனெரோல் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் திட்டத்துக்காக அமானா வங்கியுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், வட்டிசாராத, மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளை பயன்படுத்தி, எமது சொகுசான வாழிடப் பகுதியில் தொடர்மனையை உரிமையாக்கிக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். சொகுசான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு அனைவருக்கும் சகாயமான வாய்ப்பை இந்தப் பங்காண்மை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
அமானா வங்கியின் தொடர்மனை நிதியளிப்பு தீர்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.amanabank.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது 011 7 756 756 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
படத்தின் தலைப்பு - இடமிருந்து: ஹர்ஷினி முரளிதரன் – பங்காண்மை ஈடுபாட்டு இணை அதிகாரி, ரியாஸ் நூர் – நுகர்வோர் நிதியளிப்பு தலைமை அதிகாரி, சித்தீக் அக்பர் – உப தலைவர் (நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல்), மொஹமட் அஸ்மீர் – முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அமானா வங்கி, மிரேகா ஹோம்ஸ் (பிரைவட்) லிமிடெட் பணிப்பாளர் ரால்ப் டி லனெரோல், சட்டப் பிரிவின் தலைமை அதிகாரி லக்நதி பெரேரா மற்றும் விற்பனைகள் பொது முகாமையாளர் நிருபா பீரிஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.