இலங்கை வங்கியியலாளர் நிறுவகத்துடன் அமானா வங்கி ஏற்படுத்தியுள்ள பங்காண்மை தொடர்பில் அறிவித்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, IBSL மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த தொழிற்பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது. இலங்கையின் எதிர்கால வங்கியியல் நிபுணர்களுக்கான நிபுணத்துவ அபிவிருத்தி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும், பிரயோக அனுபவத்தை மேம்படுத்தவும் முன்வந்துள்ளது. இந்த உடன்படிக்கையில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் மற்றும் IBSL பணிப்பாளர் நாயகம் சி.பி.ஏ. கருணாதிலக ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.
அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “IBSL உடன் கைகோர்த்து மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். உயர் திறன் படைத்த வங்கியியல் ஊழியர்களையும், இஸ்லாமிய வங்கியியல் அறிவையும் செயற்பாடுகளையும் இலங்கையில் முன்னேற்றுவதற்கு நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தொழிற்துறையின் முன்னேற்றத்துக்கு இந்த கைகோர்ப்பு முக்கிய பங்காற்றும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், வங்கியியல் துறையின் உறுதியான மற்றும் அறிவார்ந்த செயற்பாடுகளுக்கு எமது ஆதரவையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.” என்றார்.
IBSL இன் பணிப்பாளர் நாயகம் சி.பி.ஏ. கருணாதிலக இந்தக் கைகோர்ப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் காணப்படும் தனிநபர்களின் நிபுணத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்கு அமானா வங்கியுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள பங்காண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த தொழில்பயிற்சி வாய்ப்புகளின் அறிமுகம் என்பது, உயர் தரம் வாய்ந்த கல்வி மற்றும் பயிற்சியை பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பின் எடுத்துக்காட்டாகும். பங்குபற்றுநர்களுக்கு நிதிசார் கட்டமைப்பில் மேம்படுவதற்கு இந்த தொழிற்பயிற்சி வாய்ப்புகள் உதவியாக அமையும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உலகளாவிய ரீதியில் விரிவாக்கமடைந்து வரும் வட்டியில்லாத வங்கியியல் கட்டமைப்பில் வெளிப்பாட்டை கொண்டிருக்க எதிர்பார்ப்போருக்கு அமானா வங்கியின் நிபுணத்துவம் பெறுமதி வாய்ந்த வாய்ப்பாக அமைந்திருக்கும். வங்கியியல் துறையில் உயர்ந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள ஏதுவாக அமையும்.” என்றார்.
அமானா வங்கியின் நிபுணத்துவத்துடன் கைகோர்த்து IBSL இனால் அண்மையில் இஸ்லாமிய வங்கியியல் டிப்ளோமா அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதனூடாக மாணவர்களுக்கு களத்திலுள்ள நிபுணர்களுடன் இணைந்து நேரடியாக பயில்வதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கியிருந்தது.
இலங்கை வங்கியாளர்கள் நிறுவகம் (IBSL) வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் கல்விசார் மற்றும் நிபுணத்துவ தகைமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக தம்மை அர்ப்பணித்த நிறுவகமாக அமைந்துள்ளது. தனிநபர்களுக்கு வங்கியியல் துறையில் நிபுணத்துவம் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
இடமிருந்து: அமானா வங்கியின் பயிலல் மற்றும் விருத்தி தலைமை அதிகாரி சஞ்ஜீவ பொன்சேகா, அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர், அமானா வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் உதவி உப தலைவர் ராஜேந்திர ஜயசிங்க, அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் மற்றும் அமானா வங்கி முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், IBSL பணிப்பாளர் நாயகம் சி.பி.ஏ. கருணாதிலக மற்றும் இதர IBSL பிரதிநிதிகளான சேதனா ரணவீர மற்றும் ஜினந்தி சந்திரரத்ன ஆகியோர் காணப்படுகின்றனர்.