இலங்கையின் சிறந்த இஸ்லாமிய நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் உயர் கௌரவிப்பை அமானா வங்கி மீண்டும் தனதாக்கியுள்ளது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் சர்வதேச நாணய நிதியம்/உலக வங்கியின் வருடாந்த சந்திப்புகள் நடைபெறும் காலப்பகுதியில், அமெரிக்காவின் குளோபல் ஃபினான்ஸினால் ஏற்பாடு செய்யப்படும் 17 ஆவது உலகின் சிறந்த வங்கி விருதுகள் 2024 நிகழ்வில் இந்த கௌரவிப்பு வழங்கப்படும்.
அமெரிக்காவின் குளோபல் ஃபினான்ஸ் என்பது நிதிசார் ஊடகவியலில் கொண்டுள்ள நிபுணத்துவத்துக்காக புகழ்பெற்றுள்ளது. நாடு, பிராந்தியம் மற்றும் சர்வதேச மட்டத்தில் நிதித் துறையில் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் சிறந்த பங்களிப்புகளை வருடாந்தம் கௌரவிக்கின்றது. இதில், சர்வதேச மட்டத்தில் வளர்ச்சியடைந்து வரும் வட்டி சாராத இஸ்லாமிய வங்கிச் சேவை மற்றும் நிதிச் சேவைகள் துறையில் ஈடுபாட்டைக் கொண்டுள்ள நிறுவனங்களின் சிறந்த செயற்பாடுகளை கௌரவித்து விருதுகளை வழங்கும் நிகழ்வையும் முன்னெடுக்கின்றது.
அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “வங்கியியலில் சிறப்பைக் கொண்டுள்ளமைக்காக சர்வதேச மட்டத்தில் கௌரவிப்பைப் பெறுவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். முன்னர் உலகின் சிறந்த வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கி என குளோபல் ஃபினான்ஸினால் கௌரவிக்கப்பட்டிருந்த நிலையில், அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட மற்றும் மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரியை கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. எமது தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபையைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டல்கள் மற்றும் சகல ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
படத்தின் தலைப்பு : குளோபல் ஃபினான்ஸ் உலகின் சிறந்த வங்கி விருதுகள் வழங்கும் நிகழ்வில் அமானா வங்கிக்கு மீண்டும் கௌரவிப்பு