அமானா வங்கியின் முன்னணி சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமான OrphanCare, மற்றுமொரு நிதிப் பகிர்ந்தளிப்பை பூர்த்தி செய்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலுடனான சவால்கள் நிறைந்த சூழல் காணப்பட்ட போதிலும், இந்த நிகழ்ச்சித் திட்டத்தினூடாக அனுகூலம் பெறும் அநாதரவான சிறுவர்களின் கணக்குகளுக்கு பணத்தை பகிர்ந்தளிக்கும் பணிகளில், இதுவரையில் 8 சுற்றுகளை தடங்கல்களின்றி விநியோகித்துள்ளது. நாடு முழுவதையும் சேர்ந்த 80 க்கும் அதிகமான அநாதை இல்லங்களின் 3000 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு முதல் நிதிப் பகிர்ந்தளிப்புகளை அமானா வங்கி மேற்கொள்கின்றது.
குறித்த காலப்பகுதிகளில் நிதிப் பகிர்ந்தளிப்பை மேற்கொள்வதற்கு மேலதிகமாக, OrphanCare திட்டத்தினூடாக 18 வயதை பூர்த்தியடைந்த அநாதரவான சிறார்களுக்கு அவசியமான ஆதரவளிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றது. அனுகூலம் பெறும் ஒவ்வொரு சிறுவர்களின் வகைப்படுத்தலையும், அவர்களின் கல்வி மட்டங்கள், மொழித் திறன்கள் மற்றும் தொழில் எதிர்பார்ப்புகள் போன்றவற்றின் பிரகாரம் மேற்கொண்டுள்ளதுடன், நன்கொடை வழங்குநர்களினூடாக அவர்களின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. இந்த நடவடிக்கையினூடாக 30 க்கும் அதிகமான அநாதரவான சிறார்களுக்கு வங்கி உதவிகளை வழங்கியுள்ளது. இதில் தொழில்நுட்ப சாதனங்கள், தொழில் வாய்ப்புகள், உயர் கல்வி அனுசரணைகள் மற்றும் தொழிற்கல்வி மற்றும் திறன் ஆதரவளிப்பு போன்றன அடங்குகின்றன.
சுயாதீனமான நம்பிக்கை நிதியமாக OrphanCare நிறுவப்பட்டுள்ளதுடன், அதிகளவில் கவனம் செலுத்தப்படாத முக்கியத்துவம் வாய்ந்த அநாதரவான சிறார்களின் தேவைகள் தொடர்பில் செயலாற்றுகின்றது. 18 வயதை எய்தும் அநாதரவான சிறார்களுக்கு, அநாதை இல்லங்களின் பராமரிப்பிலிருந்து கண்டிப்பாக வெளியேற வேண்டிய சந்தர்ப்பத்தின் போது, அவர்களுக்கு கைகொடுப்பதை இந்த நிதியம் இலக்காகக் கொண்டுள்ளது. OrphanCare இன் தலையீடானது, அவர்கள் முகங்கொடுக்கும் முக்கியமான பிரச்சினையான நிதித் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கும். அதற்காக OrphanCare நம்பிக்கை நிதியத்தினால் அநாதரவான சிறார்களின் கணக்குகளில் அவர்கள் 18 வயதை பூர்த்தி செய்யும் வரை குறிப்பிட்ட காலங்களில் நிதி வைப்புகளை மேற்கொள்கின்றது. அவர்களுக்கு 18 வயதானதும், அந்த நிதியை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த நிதியத்தின் சகல நிர்வாக மற்றும் தொழிற்பாட்டு செலவுகளையும் வங்கி முழுமையாக தனது செலவில் நிர்வகிப்பதால், நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களின் கணக்கை சென்றடைவது உறுதி செய்யப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
நிதிப் பகிர்ந்தளிப்பு தொடர்பில் OrphanCare இன் தலைமை அதிகாரி அசாட் சஹீத் கருத்துத் தெரிவிக்கையில், “சவால்கள் நிறைந்த சூழலிலும் தொடர்ச்சியாக எட்டாவது தடவையாகவும் அநாதரவான சிறார்களின் கணக்குகளுக்கு நிதிப் பகிர்ந்தளிப்பை மேற்கொள்ள முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது பல்வேறு நன்கொடை வழங்குநர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் இந்தத் திட்டத்துக்காக நாம் நன்றி தெரிவிப்பதுடன், எமது நம்பிக்கைப் காப்பாளர் சபையினரினால் வழங்கப்படும் வழிகாட்டல்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.p>
இந்தத் திட்டத்துக்கு அநாதரவானவர்களை தெரிவு செய்யும் போது, சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் இரண்டாம் தீர்மானமான சிறுவர்களினது அல்லது அவர்களின் பெற்றோர்களினது அல்லது அவர்களின் பாதுகாவலரின் நிறம், இனம், பாலினம், மொழி, மதம், அரசியல், தேசிய, இன அல்லது சமூக பின்புலம், சொத்துகள், அங்கவீனம் அல்லது பிறப்பு போன்ற எவ்வித விடயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பெருமளவு வரவேற்பும் கௌரவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றமைக்காக அமானா வங்கிக்கு, குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் விருதுகள் வழங்கலில் இலங்கையின் ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுக்கும் வங்கி, SLIBFI விருதுகள் வழங்கலில் சிறந்த சமூக மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம், தெற்காசியாவை தளமாகக் கொண்ட IFFSA விருதுகள் வழங்கலில் ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் மற்றும் ஓமானின், மஸ்கட் நகரில் இடம்பெற்ற IRB விருதுகள் வழங்கலில் ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்பு வாய்ந்த வங்கி ஆகிய விருதுகளை சுவீகரிக்க முடிந்தது.
OrphanCare நிதியத்தின் நம்பிக்கை காப்பாளர்களாக சமூக சேவையில் ஆர்வமும் அனுபவமும் கொண்ட அணியினர் செயற்படுகின்றனர். நிதியத்தின் தவிசாளராக ருஸ்லி ஹுசைன் (இலங்கை Roteract அமைப்பின் ஸ்தாபகர்), ஒஸ்மான் காசிம் (அமானா வங்கியின் ஸ்தாபகர், முன்னாள் தலைவர்), கே. ஆர். ரவிச்சந்திரன் (அமெரிக்க ரொட்டரி கழகத்தின் பணிப்பாளர் சபை தவிசாளரும், ரொட்டரி இன்டர்நஷனலின் முன்னாள் தலைவர்), ரொஹான் துடாவே - பொருளாளர் (துடாவே பிரதர்ஸ் தவிசாளர்), ஷராத் அமலீன் (இணை ஸ்தாபகர் MAS ஹோல்டிங்ஸ்), தையிப் அக்பரலி (சிரேஷ்ட பணிப்பாளர் அக்பர் பிரதர்ஸ்), ஹர்ஷ அமரசேகர (ஜனாதிபதி சட்டத்தரணி), தேசபந்து திலக் டி சொய்ஸா (ஹெல்பேஜ் ஸ்ரீ லங்கா தவிசாளர்), ஜஸ்ரி மக்தொன் இஸ்மைல் (AAT முன்னாள் தலைவர்) மற்றும் மொஹமட் அஸ்மீர் (அமானா வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி) ஆகியோர் அடங்குகின்றனர். நிதியத்தின் நீண்ட கால நிலைத்தன்மையை பேணுவதற்காகவும் மற்றும் அதியுச்ச நேர்மைத்தன்மையை பேணுவதற்காகவும் அதற்கான ஒரு உறுதியான நிர்வாகக் கட்டமைப்பை காப்பாளர்கள் நிறுவியுள்ளனர்.
இந்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்பும் நன்கொடையாளர்களை கைகோர்க்குமாறு அசாட் சஹீட் அழைப்புவிடுத்தார். OrphanCare பற்றிய மேலதிக விவரங்களையும், ஏனைய தகவல்களையும் www.orphancare.org எனும் இணையத்தளத்தினூடாக அல்லது OrphanCare செயலகத்துடன் 011 7 756 775 ஊடாக தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.