2022 முதல் காலாண்டில் அமானா வங்கியின் மொத்த வாடிக்கையாளர் வைப்புப் பெறுமதி ரூ. 100 பில்லியன் எனும் மைல்கல்லை கடந்துள்ளது. இதனூடாக, குறுகிய காலப்பகுதியில் இந்த இலக்கை கடந்த முதலாவது அங்கீகாரம் பெற்ற வணிக வங்கி எனும் பெருமையையும் தனதாக்கியுள்ளது. வங்கியின் பரந்த மற்றும் வளர்ந்து வரும் மக்களுக்கு நட்பான வங்கி முறைமை அனைத்து இலங்கையர்களும் ஏற்றுக் கொண்டுள்ளமையின் காரணமாக இந்த துரித வளர்ச்சியை வங்கியினால் பதிவு செய்ய முடிந்திருந்தது. 2022 முதல் காலாண்டு நிறைவில், வங்கியின் மொத்த வாடிக்கையாளர் வைப்புப் பெறுமதி ரூ. 105.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் நிறைவின் போது பதிவாகியிருந்த ரூ. 96.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 10 சதவீத அதிகரிப்பாகும். 2021 ஆம் ஆண்டில் அமானா வங்கிக்கு, குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் இனால் இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் வங்கி எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், த ஏசியன் பாங்கர் சஞ்சிகையினால், உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த சாதனை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “மிகவும் குறுகிய காலப்பகுதியில் எம்மால் இந்த சாதனையைப் பதிவு செய்ய முடிந்துள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். இதனூடாக எமது மக்களுக்கு நட்பான வங்கி மாதிரியையும், இலாபப் பகிர்வு அடிப்படையில் வங்கியினால் வழங்கப்படும் கவர்ச்சிகரமான வருமதிகள் போன்றவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது. எம்மீது தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.
வங்கியின் வைப்புகள் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கப் பிரிவின் உதவி உப தலைவர் அர்ஷாத் ஜமால்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில், அமானா வங்கியினால் பல்வேறு கவர்ச்சிகரமான வைப்புத் தீர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் விருது வென்ற ‘Savings Plan’ மற்றும் ‘Flexi Term Investment’ போன்ற கணக்குகளும் அடங்குகின்றன. வாடிக்கையாளர்களுக்கான ‘Prestige’, ‘Vantage’ மற்றும் ‘Expat Gold’ போன்றவற்றினூடாக முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுவதுடன், பிரத்தியேகமான சேவை முகாமைத்துவம் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட அனுகூலங்கள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. அவற்றினூடாக, பெருமளவு வாடிக்கையாளர்கள் கவர்ந்திழுக்கப்படுவதுடன், எம்முடன் பலர் இணைந்துள்ளனர். இதனூடாக எமது வளர்ச்சி மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் வட்டி சாராத மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரியில் இலங்கையில் இயங்கும் முதலாவதும் ஒரே அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சிக்கு கைகொடுப்பது மற்றும் வாழ்வுக்கு வளமூட்டுவது எனும் நோக்கத்துக்கமைய, தனது வளர்ந்து வரும் கிளை வலையமைப்பைச் சேர்ந்த 33 கிளைகள் மற்றும் 20 சுய வங்கிச் சேவை நிலையங்கள் போன்றவற்றினூடாக சேவைகளை வழங்குகின்றது. அத்துடன் நாடு முழுவதிலும் காணப்படும் 5400க்கும் அதிகமான ATM களில் பண மீளப்பெறுகைகளையும், பண வைப்புகளை மேற்கொள்வதற்கு 850 க்கும் அதிகமான Pay&Go Kiosks களையும் கொண்டுள்ளது. இணைய மற்றும் மொபைல் வங்கிச் சேவை, 24x7பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேகமான வங்கியியல் அலகுகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சௌகரியங்களையும் அனுகூலங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் அமானா வங்கியின் நீண்ட கால தரப்படுத்தலை BB+(lka) உறுதியான தோற்றப்பாட்டுடன் வழங்கியிருந்தது. அமானா வங்கி வேறு எவ்வித துணை நிறுவனங்களையோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருக்கவில்லை.