அமானா வங்கியினால் முன்னெடுக்கப்படும் நன்மதிப்பை வென்ற சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான Orphancare க்கு, ஆண்டின் சிறந்த சமூக மேம்படுத்தல் திட்டத்துக்கான தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. அண்மையில் இடம்பெற்ற 2020 இற்கான SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வில், KMPG இனால் இந்த விருதுக்கு அமானா வங்கி தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பாக நிதியத்தின் தவிசாளராக ருஸ்லி ஹுசைன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த தங்க விருதை வெற்றியீட்டியுள்ளமையானது அமானா வங்கியின் Orphancare திட்டத்தை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக அநாதரவான சிறுவர்களுக்கு வாழ்க்கையில் நியாயமான தெரிவுகளை மேற்கொள்ள வாய்ப்பை வழங்குவதாக அமைந்திருக்கும். காப்பகத்தின் பொறுப்பிலிருந்து அநாதரவான சிறுவர்கள் வெளியேறிய பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை தணிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் திட்டத்துக்கு காணப்படும் வரவேற்பை இந்த விருது மேலும் உறுதி செய்துள்ளது. திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் எனது சக நம்பிக்கை நிதிக் காப்பாளர்கள், நன்கொடையாளர்கள், வங்கியின் ஊழியர்கள் மற்றும் பங்காளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.
Orphancare இன் தலைமை அதிகாரி அசாத் சஹீத் கருத்துத் தெரிவிக்கையில், “தொற்றுப் பரவல் காணப்பட்ட போதிலும், எமது செயற்பாடுகளை நாம் இடைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்திருந்ததுடன், இந்தத் திட்டத்துக்கான நிதிப் பகிர்ந்தளிப்பையும் மேற்கொண்டிருந்தோம். அனுகூலம் பெறும் அநாதாரவான சிறார்களின் எண்ணிக்கையையும் அதிகரித்திருந்தோம். அதனூடாக Orphancare திட்டத்துக்கு அதிகரித்துச் செல்லும் வரவேற்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அமானா வங்கியின் Orphancare திட்டத்தில் 2800 க்கும் அதிகமான அநாதரவான சிறார்கள் நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுக்காக 5 சுற்று நிதி பகிர்ந்தளிப்பும் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
வங்கியின் முன்னணி சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமாக அமைந்துள்ள Orphancare, சுயாதீன நம்பிக்கை நிதியமாக நிறுவப்பட்டுள்ளதுடன், அதனூடாக சமூகத்தில் அதிகளவு அக்கறை செலுத்தப்படாத, அநாதரவான சிறுவர்களுக்கு கைகொடுத்து உதவும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 18 வயதை பூர்த்தி செய்ததும், தமது காப்பகங்களிலிருந்து வெளியேறும் குறித்த கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. “இரண்டாம் கைதுறப்பு” என யுனிசெவ் அமைப்பினால் குறிப்பிடப்படும், இந்தப் பிரச்சனை, தமது சிறுபராயத்தில் கைவிடப்பட்ட அநாதரவான சிறுவர்கள் தற்போது குறித்த வயதைப் பூர்த்தி செய்து, காப்பகத்தின் பராமரிப்பிலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலையை எதிர்கொண்டுள்ள மற்றுமொரு சவாலாக அமைந்துள்ளது. அவர்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனையாக நிதியைக் கொண்டிராமை தொடர்பில் வங்கி கவனம் செலுத்தியுள்ளது. அதற்காக Orphancare நம்பிக்கை நிதியத்தினூடாக, குறித்த அநாதரவான சிறுவர்களின் கணக்குகளில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரையில் குறிப்பிட்ட தொகை வைப்புச் செய்யப்படுகின்றது. அவர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்ததும், அந்தப் பணத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில், நிர்வாக மற்றும் செயற்பாட்டு செலவுகள் அனைத்தையும் அமானா வங்கி பொறுப்பேற்றுள்ளமையால், நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், அனுகூலம் பெறுநரைச் சென்றடைவதாகும். இந்தத் திட்டத்துக்கு அநாதரவானவர்களை தெரிவு செய்யும் போது, சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் இரண்டாம் தீர்மானமான சிறுவர்களினது அல்லது அவர்களின் பெற்றோர்களினது அல்லது அவர்களின் பாதுகாவலரின் நிறம், இனம், பாலினம், மொழி, மதம், அரசியல், தேசிய, சமூக பின்புலம், சொத்துகள், அங்கவீனம் அல்லது பிறப்பு போன்ற எவ்வித விடயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.
இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் சஹீத் குறிப்பிடுகையில், “அனாதரவான சிறுவர் ஒருவரின் எதிர்காலத்துக்கு வளமூட்ட எதிர்பார்க்க நினைக்கும் அனைவரையும் இந்தத் திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறு நான் அழைக்கின்றேன். ஆர்வமுள்ளவர்கள் Orphancare தொடர்பான தகவல்களை www.amanabank.lk/orphan-care எனும் இணையத்தளத்தினூடாக அல்லது 011 775 6 775 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும். www.bit.ly/orphan-care-video இல் காணப்படும் ‘‘From Chance to Choice’ எனும் காணொளியை பார்வையிடுமாறும் நாம் அனைவரையும் வேண்டிக்கொள்கின்றோம்.” என்றார்.