260 மில்லியன் ரூபாய் பெறுமதியான இடைக்கால மேலதிக பங்குகளை பங்கிலாபமாக வழங்குவது தொடர்பான அறிவிப்பை அமானா வங்கி வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, இவற்றுக்கான XD திகதி மற்றும் பதிவு திகதியாக முறையே ஒக்டோபர் 4 மற்றும் ஒக்டோபர் 6 ஆம் திகதிகளை கொழும்பு பங்குப்பரிவர்த்தனைக்கான அறிவித்தலினூடாக அமானா வங்கி உறுதி செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் அனைத்து வங்கிகளுக்கும் பணப் பங்கிலாபங்களை வழங்குவதை மட்டுப்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, வங்கியில் கொண்டிருக்கும் ஒவ்வொரு 29.0000002675 சாதாரண பங்குக்கும் புதிய சாதாரண பங்கு வீதம் வழங்கும் என்பதுடன், பங்கொன்றின் பெறுமதி 2.90 ஆக அமைந்திருக்கும். மேலதிக பங்குகளை பங்கிலாபமாக வழங்கும் நடவடிக்கை பூர்த்தியடைந்ததும், வங்கியின் வழங்கப்பட்ட மூலதனம் 89,705,039பங்குகளால் அதிகரித்து 2,691,151,194 ஆக அமைந்திருக்கும். 2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான மேலதிக பங்குகளை பங்கிலாபப் பெறுமதியை விட இம்முறை 30சதவீதம் உயர்வான தொகையை வங்கி அறிவித்துள்ளது. 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து, வங்கி செலுத்தும் தொடர்ச்சியான நான்காவது பங்கிலாபமாக இது அமைந்துள்ளது.