அமானா வங்கி தனது இருபதாவது சுய வங்கிச் சேவை நிலையத்தை தோப்பூரில் அண்மையில் திறந்து வைத்தது. வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் மற்றும் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் ஆகியோருடன் பிரதேசவாசிகள், வங்கியின் அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்பில் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தினூடாக 24x7 பண வைப்பு மற்றும் மீளப் பெறல்கள் போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
இல. 02, பிரதான வீதி, தோப்பூர் எனும் முகவரியில் அமைந்துள்ள தோப்பூர் சுய வங்கிச் சேவை நிலையமானது, அப்பிரதேசத்தில் காணப்படும் ATM மற்றும் CDM ஆகிய வசதிகளைக் கொண்ட ஒரே நிலையமாக அமைந்துள்ளதுடன், பலரின் நிதிச் சேவைகளை நிவர்த்தி செய்கின்றது.
தோப்பூரில் நிறுவப்பட்ட இந்த சுய வங்கிச் சேவை நிலையம் தொடர்பில் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது இருபதாவது சுய வங்கிச் சேவை நிலையத்தின் திறந்து வைப்புடன், எமது தோப்பூர் பிரதேச மக்கள் பயன் பெற்றுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம். இவர்களுக்கு நீண்ட காலமாக தமது நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு ATM மற்றும் CDM வசதிகள் இருக்கவில்லை. அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள அருகாமையிலுள்ள நகரங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பின்தங்கிய பிரதேசங்களில் சுய வங்கிச் சேவை நிலையங்களை நிறுவியிருந்ததைத் தொடர்ந்து கிடைத்திருந்த வரவேற்பின் பிரகாரம், இந்த சௌகரியமான சேவைகளினூடாக பல வாடிக்கையாளர்களுக்கு பயனைப் பெற்றுக் கொடுக்க நாம் தீர்மானித்தோம். மேலும் பல பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் அமானா வங்கியின் நீண்ட கால தரப்படுத்தலை BB+(lka) உறுதியான தோற்றப்பாட்டுடன் வழங்கியிருந்தது. அமானா வங்கி வேறு எவ்வித துணை நிறுவனங்களையோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருக்கவில்லை.