அமானா வங்கி தனது இலாபகரமான செயற்பாடுகளை மேலும் உறுதி செய்யும் வகையில் 2021 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வரிக்கு முந்திய இலாபத்தில் 89% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 736.3 மில்லியனாக பதிவு செய்திருந்தது. 2020 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 389.4 மில்லியனாக பதிவாகியிருந்தது. தொற்றுப் பரவல் காரணமாக இலங்கை மோசமாக பாதிப்படைந்திருந்த மூன்றாம் காலாண்டு பகுதியில் அமானா வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் 66% இனால் வளர்ச்சியடைந்து ரூ. 230.6 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இப் பெறுமதி ரூ. 138.9 மில்லியனாக காணப்பட்டது. மூன்றாம் காலாண்டு பகுதியில் வரிக்கு பிந்திய இலாப வளர்ச்சியாக 80% ஐ வங்கி பதிவு செய்து ரூ. 143.9 மில்லியனை எய்தியிருந்தது. 2021 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் திரண்ட வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 433.2 மில்லியன் பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 73% உயர்வாகும்.
முற்பணங்கள் மற்றும் வைப்புகள் ஆகிய பிரிவில் வங்கியின் வளர்ச்சி இரட்டை இலக்கத்தினால் பதிவு செய்திருந்ததுடன், வாடிக்கையாளர் முற்பணங்கள் 17% இனால் உயர்ந்து ரூ. 73.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. வாடிக்கையாளர் வைப்புகள் 10% இனால் உயர்ந்து ரூ. 91.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள சவால்களின் போதும், மூன்று காலாண்டுகளிலும் வங்கி உறுதியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதை காண முடிகின்றது. வாடிக்கையாளர் வைப்புகளில் வளர்ச்சி பதிவாகியிருந்ததுடன், ஆரோக்கியமான CASA விகிதமான 46.2% பேணப்பட்டிருந்தது. முறையான முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களுடன் உரிய நேரத்தில் ஈடுபாடுகளை பேணியிருந்தமையினூடாக, வங்கியின் தொழிற்படா முற்பணங்கள் (NPA) வங்கித்துறையின் சராசரி பெறுமதியை விட குறைவாக காணப்பட்டது. நிகர NPA மற்றும் தேறிய NPA ஆகியன முறையே 3.7% மற்றும் 1.0% ஆக பதிவாகியிருந்தன. வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 113.7 பில்லியனாக அதிகரித்திருந்தது. ஒன்பது மாத காலப்பகுதிக்கான 14% வளர்ச்சி பிரதிபலித்திருந்தது. இதே காலப்பகுதியில் வங்கியின் பங்கொன்றின் மீதான தேறிய சொத்துப் பெறுமதி ரூ. 4.79 இலிருந்து ரூ. 4.96 ஆக உயர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
வங்கியின் முற்பணங்களின் வளர்ச்சியும், குறைந்த செலவிலமைந்த வைப்புகள், வங்கியின் தேறிய நிதியளிப்பு வருமானம் 36% இனால் அதிகரிக்கச் செய்து ஒன்பது மாத காலப்பகுதியில் ரூ. 3.17 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், மூன்றாம் காலாண்டில் மாத்திரம் ரூ. 1.18 பில்லியனாக பதிவாகியிருந்தது. மதிப்பிறக்கத்தின் பின்னரான தேறிய தொழிற்பாட்டு வருமானம் ரூ. 2.90 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13% அதிகரிப்பாகும். வங்கி அதன் தொழிற்பாட்டு செலவீனங்களை தொடர்ந்தும் குறைத்திருந்ததுடன், 2020 செப்டெம்பர் மாதம் முதல் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை தொடர்ந்தும் வெளிப்படுத்தி, வங்கியின் வருமானத்துக்கான செலவு விகிதத்தை மேம்படுத்த உதவியிருந்தது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், முதல் ஒன்பது மாதங்களில் தொழிற்பாட்டு செலவீனங்களை மேலும் 3% இனால் குறைத்திருந்தது. சிறந்த வருமானத்துடன், நிதிச் சேவைகளின் மீதான பெறுமதி சேர் வரிக்கு முன்னதான தொழிற்படு இலாபமாக ரூ. 1 பில்லியனை பதிவு செய்திருந்தது. 2020 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 62% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. மூன்றாம் காலாண்டில் வங்கியின் திரண்ட வரி பங்களிப்பு ரூ. 570.7 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது வங்கியின் மொத்த வரிக்கு முன்னதான தொழிற்பாட்டு இலாபத்துக்கு முன்னரான பெறுமதியில் 57% ஐ பதிவு செய்திருந்தது.
வங்கியின் தொடர்ச்சியான இலாபகரத்தன்மைக்கமைவாக, இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களின் பிரகாரம், தொடர்ச்சியாக 4ஆவது பங்கிலாபத்தை வழங்குவதாக அறிவித்திருந்தது. ரூ. 260.1 மில்லியனாக இந்தத் தொகை அமைந்திருப்பதுடன், முன்னர் செலுத்தப்பட்ட பங்கிலாபங்களுடன் ஒப்பிடுகையில் 30% உயர்வாகும். காலாண்டில் ஃபிட்ச் ரேட்டிங்ஸினால் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தல் உறுதியான புறத் தோற்றத்துடன் BB+ என அறிவிக்கப்பட்டிருந்தது. சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில் வங்கியின் நிதி வலிமை மற்றும் நிலையான வினைத்திறன் போன்றன தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு இந்த தரப்படுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், குறிப்பாக சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்காக, இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலம் மற்றும் இதர நிவாரணத் திட்டங்களுக்கு மேலாக, சுயமாக முன்வந்து நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இவற்றில் சம்பள முற்பணங்கள், நிதி வசதிகள் மீளமைப்பு மற்றும் தண்டப் பணம் அறவீடுகளிலிருந்து விலக்கழிப்பு போன்றன அடங்கியிருந்தன.
வங்கியின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “மூன்றாம் அலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகளுக்கு மத்தியிலும், அமானா வங்கியினால் உறுதியான மீட்சியை பதிவு செய்ய முடிந்ததுடன், சிறந்த காலாண்டுப் பெறுபேறுகளை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. எமது பணிப்பாளர் சபையின் அங்கத்தவர்களின் வழிகாட்டல்கள், ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மற்றும் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் வெளிப்படுத்தியிருந்த நம்பிக்கை போன்றவற்றினூடாக எம்மால் இந்த சிறந்த பெறுமதிகளை பதிவு செய்ய முடிந்தது. இவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். 2021 ஆம் ஆண்டு நிறைவை எய்தியுள்ள நிலையில், பொருளாதார மீட்சிக்கு அமானா வங்கி தொடர்ந்தும் உறுதியான பங்களிப்பை வழங்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.
அமானா வங்கி 2021 ஆகஸ்ட் 1ஆம் திகதி நட்புறவான வங்கிச் சேவைகளை வழங்குவதில், 10 வருடங்களை பூர்த்தி செய்திருந்தது. இக்காலப் பகுதியில் 380,000க்கு அதிகமான வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு வளமூட்டியிருந்தது. குறுகிய காலப்பகுதியில் வங்கி பதிவு செய்திருந்த முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவின் குளோபல் ஃபினான்ஸ் சஞ்சிகையினால் ‘உலகின் சிறந்த வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கி’ எனும் கௌரவிப்பைப் பெற்றிருந்ததுடன், ஐக்கிய இராச்சியத்தின் குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் “இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் வங்கிச் சேவை” எனும் கௌரவிப்பையும் பெற்றுக் கொண்டது. வங்கியின் ஐந்தொகையின் வலிமை மற்றும் சொத்துக்களின் அளவை கவனத்தில் கொண்டு, த ஏசியன் பாங்கரினால் உலகின் சிறந்த 100 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கி தரப்படுத்தப்பட்டிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.