அமானா வங்கி தனது மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளை மேலும் விஸ்தரிக்கும் வகையில், தனது 41ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தை பொலன்னறுவை மாவட்டத்தின் தம்பலா பகுதியில் திறந்துள்ளது. அதனூடாக, தம்பலா பகுதியில் பிரசன்னத்தை ஏற்படுத்தியுள்ள முதலாவது தனியார் வங்கி எனும் பெருமையை கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் வர்த்தக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இந்த பிரதேசத்தின் நிதிச் செயற்பாடுகளை வலுவூட்டும் வகையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. பிரதேசத்தில் சௌகரியமான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய வங்கிச் சேவைக்கான நீண்ட கால கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த புதிய சுய வங்கிச் சேவை நிலையம் இல. 93A, அல்-ஹிலால் புர, தம்பலா எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனூடாக, 24/7 நேரமும் பண மீளப்பெறுகைகள், பண வைப்புகள் மற்றும் காசோலை வைப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். அதனூடாக பிரதேசவாசிகள், விற்பனையகங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஒப்பற்ற சௌகரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வில் அமானா வங்கியின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் பிராந்திய கிளைகளுக்கான உதவி உப தலைவர் அர்ஷாத் அத்னான், விற்பனைகள் மற்றும் கையகப்படுத்தல் நாளிகைகளின் தலைமை அதிகாரி மொஹமட் அஸ்மில் மற்றும் கதுருவெல கிளை முகாமையாளர் ராசிக் ஜிஃப்ரி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்துடன், லங்காபுர பிரதேச செயலாளர் எச்.எம்.விஷாகா எஸ். ஜயவர்தன, அகில இலங்கை ஜமியத்துல் உலாமாவின் பிரதிநிதிகள், தம்பலா ஜும்மா மஸ்ஜித் அறங்காவலர்கள் மற்றும் பிரதேசவாசிகள் மற்றும் வியாபார பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமானா வங்கியின் உதவி உப தலைவர் அர்ஷாத் அத்னான் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் மகாவலி கங்கையை அண்மித்த பிரதான விவசாய பிராந்தியங்களில் காணப்படும் சிறிய சமூகமாக தம்பலா அமைந்துள்ளது. அப்பகுதியில் சுய வங்கிச் சேவை நிலையத்தை நிறுவியுள்ளதனூடாக, பிரதேசவாசிகள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரங்களுக்கு 24/7 நேரமும் சௌகரியமாக பாதுகாப்பான வங்கிச் சேவைகளை அணுகுவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளோம். உள்நாட்டு வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளித்தல், கிராமிய பொருளாதார செயற்பாடுகளை வலிமைப்படுத்தல் மற்றும் உள்ளடக்கமான தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல் ஆகியவற்றுக்கான எமது அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை வெளிப்படுத்தியுள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
Image 1 Caption:அமானா வங்கியின் உதவி உப தலைவர் அர்ஷாத் அத்னான், சைனா போர்ட் சுய வங்கிச் சேவை நிலையத்தை திறந்து வைப்பதையும், அருகில் இதர விசேட விருந்தினர்கள் காணப்படுவதையும் காணலாம்.