வட்டிசாரா வங்கிச் சேவையை வழங்குவதில் இலங்கையில் முதன்மையானதும், உரிமம் பெற்ற ஒரே வங்கியுமான அமானா வங்கி, 2026 ஆகஸ்ட் 1ஆம் திகதி தனது செயற்பாடுகளை ஆரம்பித்து பெருமையுடன் 15 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல், நாட்டின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் சவாலான சில காலப்பகுதிகளை வெற்றிடமாக எதிர்நோக்கியவாறு, வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் நம்பிக்கை, வரவேற்பு மற்றும் ஆதரவின் பலத்தால் இவ்வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இன்று, நாடு முழுவதிலும் உள்ள கிளைகள் மற்றும் சுய வங்கிச் சேவை மையங்கள் அடங்கலாக 80 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் மையங்களில் விரிவடைந்து வரும் வலையமைப்பின் மூலம் 500,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையாற்றி வருகிறது. இந்த அபார வளர்ச்சியானது, வங்கியின் அபிவிருத்தியை மையமாகக் கொண்ட மக்கள் நட்பு அணுகுமுறையின் ஊடாக வாடிக்கையாளர்களின் வளர்ச்சியை வலுப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை வளம்படுத்துவதில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்த பலமான அடித்தளத்தைக் கொண்டு, அமானா வங்கி தனது உறுதியான நிதியியல் செயற்பாடுகளையும் நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதோடு, இலங்கையின் வங்கித் துறையில் ஒரு முக்கிய அங்கமாகத் தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வங்கி அண்மையில் மொத்தச் சொத்துக்களில் 200 பில்லியன் ரூபாயைத் தாண்டி, இம்மாபெரும் மைல்கல்லை அடைந்த நாட்டின் மிகவேகமான வங்கிகளுள் ஒன்றாக மாறியுள்ளது. வலுவான இடர் முகாமைத்துவக் கட்டமைப்பு, முறையான ஆளுகை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட கலாசாரம் ஆகியவற்றின் பக்கபலத்துடன், தனது சொத்துத் தரத்தில் எந்தவொரு விட்டுக் கொடுப்புகளும் இன்றி நிலையான வளர்ச்சியை முன்னெடுக்கும் ஆற்றலை வங்கியின் இச்சாதனைகள் பிரதிபலிக்கின்றன. அத்துடன், வைப்புகள் மற்றும் நிதியளிப்பு ஆகிய இரண்டிலும், தொழிற்படா முற்பணங்களின் (NPA) விகிதத்தை மிகக் குறைந்த மட்டத்தில் பராமரித்து, மிகவலுவான CASA விகிதங்களை பேணி, தொழிற்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விடத் தொடர்ச்சியாக அதிக வளர்ச்சியை வங்கி பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்கிலாபங்களை அறிவித்து வந்ததுடன், நிலையான இலாபத்தன்மையின் தொடர்ச்சியான தடத்தையும் வங்கி பராமரித்து வருகிறது.
சில்லறை மற்றும் சிறு, நடுத்தர தொழில்முயற்சி (SME) சார்ந்த ஒரு வங்கியாக, அமானா வங்கி தொழில்முனைவோர்கள், வணிகங்கள் மற்றும் குடும்ப நிதித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அமானா வங்கியானது, சொத்துகளை அடிப்படையாகக் கொண்ட தனித்துவமான வங்கி முறைமையின் ஊடாக, பொருளாதாரத்தின் உண்மையான உற்பத்தித் துறைக்கு அமானா வங்கி நேரடியாக நிதியளிப்பை வழிநடத்துகிறது. இதன் மூலம் உற்பத்தித்திறன்மிக்க பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, வணிகங்களையும் தொழில்துறைகளையும் வலுப்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்புச் செய்கிறது
வங்கியின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவது, இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) குழுமம், அதன் தனியார் துறைப் பிரிவான “தனியார் துறையின் அபிவிருத்திக்கான இஸ்லாமியக் கழகம்” (ICD) ஊடாக அமானா வங்கியின் பிரதான மூலோபாயப் பங்குதாரராகத் தொடர்ந்து, வங்கி மீது வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கையாகும். IsDB குழுமத்தின் உறுப்பு நாடாக இலங்கை இல்லாதபோதிலும், அமானா வங்கியிலான அவர்களின் முதலீடானது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெற்றிக் கதையாகத் திகழ்கிறது. இது, ஒரு பன்முகத்தன்மை கொண்ட சந்தையில் தேசிய வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதுடன், நேர்மையான மற்றும் விழுமியங்களை மையமாகக் கொண்ட வங்கி முறைமை எவ்வாறு செழித்து வளர முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அமானா வங்கி பெற்றுள்ள தொடர்ச்சியான முன்னேற்றங்களைப் பாராட்டி, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பல உயரிய விருதுகளும் அங்கீகாரங்களும் அதற்கு வழங்கப்பட்டுள்ளன. வங்கியின் ஆரம்பக் கட்டத்தில் அமெரிக்காவின் Global Finance சஞ்சிகையினால் ‘உலகின் சிறந்த வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கி’ என பெயரிடப்பட்டதிலிருந்து, அண்மையில் The Asian Banker இனால் ‘உலகின் மிக பலம் வாய்ந்த சிறந்த 50 இஸ்லாமிய வங்கிகளுள் ஒன்று’ எனத் தரப்படுத்தப்பட்டமை வரை பல சான்றுகளைக் குறிப்பிடலாம். மேலும், Islamic Development Bank Group இன் 30க்கும் மேற்பட்ட உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களுள் “Most Impactful ICD Investee Company” என்ற கௌரவத்தையும் அமானா வங்கி பெற்றுள்ளது. இலங்கையின் வங்கித் துறையில் வங்கியின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், PwC நிறுவனத்தின் மத்தியஸ்தத்தைக் கொண்ட ICC Emerging Asia Banking Awards இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் ‘இலங்கையின் சிறந்த வங்கி’ என அமானா வங்கி விருதைப் பெற்றுக் கொண்டது. இலங்கையின் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் துறை கட்டமைப்புக்குள் தனது முன்னோடிப் பங்களிப்பையும் தலைமைத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், IFFSA Awards இல் ‘தசாப்தத்தின் சிறந்த வங்கி’ விருது உட்பட பல அங்கீகாரங்களை வங்கி பெற்றுள்ளது. அத்துடன், IFFSA விருதுகள் மற்றும் 'இலங்கை இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித்துறை' (SLIBFI) விருதுகள் ஆகிய இரண்டிலும் சிறந்த வங்கி, சிறந்த நிதி நிறுவனம் மற்றும் சிறந்த நிதி பரிவர்த்தனைகளுக்கான பல விருதுகளையும் அமானா வங்கி சுவீகரித்துள்ளது.
வங்கிச் சேவைகளுக்கும் அப்பாற்பட்டு, நமது முதன்மையான சமூக நல்வாழ்வுத் திட்டமான OrphanCare தொடர்ந்தும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்கு 10 ஆன “சமத்துவமின்மையைக் குறைத்தல்” என்பதன் தூண்டுதலிலும், எவ்வித பாகுபாடும் இல்லாது உறுதியளிக்கும் சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் பிரிவு 2 இன் வழிகாட்டலிலும், OrphanCare திட்டமானது, நிறுவனப் பராமரிப்பில் இருந்து வெளியேறிய பின்னர் நிதியியல் சுதந்திரத்தை நோக்கிய பயணத்தில் இலங்கை முழுவதிலும் உள்ள அனாதைச் சிறுவர்களுக்கு ஆதரவளிக்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு இல்லாமையால் ஏற்படக்கூடிய இரண்டாவது கைவிடலில் இருந்து காப்பாற்ற உதவுகிறது. இதுவரை, நாடு முழுவதிலும் உள்ள 90 க்கும் மேற்பட்ட அனாதை இல்லங்களைச் சேர்ந்த 3,200 க்கும் அதிகமான சிறுவர்கள் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பயனாளிகளின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை ஆவணப்படுத்தி, OrphanCare தனது முதலாவது பங்களிப்பு அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. இதனை www.orphancare.org எனும் இணைப்பில் பார்வையிடலாம்.
இந்த மைல்கல் தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கி தனது 15வது ஆண்டு நிறைவைப் பூர்த்தி செய்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை அளப்பரிய நன்றியுணர்வுடனும் ஆழ்ந்த நோக்குடனும் கொண்டாடுகிறோம். இந்த மைல்கல்லானது எங்கள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் அனைத்துப் பங்குதாரர்களும் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. அறநெறி சார் வங்கிச் சேவை, நிதி உள்ளடக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய எங்களது ஆரம்பக்காலக் கோட்பாடுகளுக்கு உண்மையுள்ளவர்களாக விளங்கி, இந்த வளர்ச்சியை நாம் எட்டியுள்ளதையிட்டு பெருமிதமடைகிறோம். முன்னோடியில்லாத பொருளாதார மற்றும் உலகளாவிய சவால்கள் நிறைந்த காலப்பகுதிகளிலும் நாம் உறுதியுடன் நிலைகொண்டு, எமது வாடிக்கையாளர்களுக்குத் தோளோடு தோள் நின்று, இலங்கையின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்துள்ளோம். எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் வேளையில், எமது வாடிக்கையாளர்களுக்கு நிலையான மதிப்பினை உருவாக்குவதற்கும், சமூகங்களை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவளிப்பதற்கும் நாம் என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்." என்றார்.
வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது பதினைந்து ஆண்டுகால பயணமானது நம்பிக்கை, மீண்டெழும் திறன் மற்றும் நமது அனைத்து பங்காளர்கள் மீதும் உண்மையான அக்கறையை வெளிப்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் நீடித்த பலத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது. அரை மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றியமை, 200 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைத் தாண்டியமை மற்றும் சீரான நிதியியல் செயற்பாடுகளை வெளிப்படுத்தியமை வரை நாம் அடைந்துள்ள ஒவ்வொரு மைல்கல்லும் நமது வாடிக்கையாளர்களின் தளராத ஆதரவு, நமது பணிப்பாளர் சபையின் வழிகாட்டல், நமது ஷரீஆ மேற்பார்வைக் குழுவின் ஆற்றல் மற்றும் நமது ஊழியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலமே சாத்தியமானது. வங்கியின் நிர்வாகத்தின் சார்பில், நமது பதினைந்து ஆண்டுகால பயணத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளில் நாம் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையின் பலத்தால், நமது மிகவும் உற்சாகமான அத்தியாயங்கள் இன்னும் வரவிருக்கின்றன என நாம் நம்புகிறோம். “வளர்ச்சியை ஊக்குவித்து, மக்களின் வாழ்வுக்கு வளமூட்டுவது” நமது இலக்கின் வழிகாட்டலில், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு நிலையான மதிப்பைத் தொடர்ந்து உருவாக்கும் இன்னும் வலுவான ஒரு நிறுவனத்தைக் கட்டியெழுப்ப நாம் தொடர்ந்து உறுதியுடன் உள்ளோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
Image 01, Caption : அஸ்கி அக்பரலி – தவிசாளர், அமானா வங்கி
Image 02, Caption : மொஹமட் அஸ்மீர் – முகாமைத்துவ பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி, அமானா வங்கி
Image 03, Caption : அமானா வங்கி –தலைமை அலுவலகம்