• Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கி தனது வரலாற்றில் அதிசிறந்த நிதிப் பெறுபேறுகளை 2025 ஆம் ஆண்டில் எய்தியுள்ளது

Amãna Bank March 4, 2026

· வரிக்கு முந்திய இலாபம் 47% இனால் உயர்ந்து ரூ 4.0 பில்லியனாக பதிவு மற்றும் வரிக்கு பிந்திய இலாபம் ரூ 2.4 பில்லயனாகவும், ROE 10.4% ஆகவும் பதிவு

· முற்பணங்கள் 36% வளர்ச்சியை பதிவு செய்த போதிலும் NPA 1.2% எனும் குறைந்த பெறுமதியை பதிவு செய்துள்ளது

· உலகின் வலிமையான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்று எனும் சர்வதேச தரப்படுத்தலையும் பெற்றுக் கொண்டது

அமானா வங்கி 2025 ஆம் ஆண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. வங்கியில் வரிக்கு முந்திய இலாபம் 47% இனால் உயர்ந்து ரூ 4.1 பில்லியனாகவும், வரிக்கு பிந்திய இலாபம் 40% இனால் உயர்ந்து ரூ. 2.4 பில்லியனாகவும் பதிவாகியிருந்தது. வங்கி 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து பதிவாகியிருந்த உயர்ந்த இலாபப் பெறுமதிகளாக இவை அமைந்துள்ளன. சகல வரிகளுக்கும் முன்னரான தொழிற்படு இலாபம் 45% இனால் உயர்ந்து ரூ. 5.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் திரண்ட வரிப் பங்களிப்பு ரூ. 3.0 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது, வங்கியின் சகல வரிகளுக்கும் முன்னரான தொழிற்படு இலாபத்தின் 55% ஆக பதிவாகியிருந்தது.

வங்கியின் முதன்மை வருமான பெறுபேறுகளைப் பொறுத்தமட்டில், நிகர நிதியிடல் வருமானமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21% வளர்ச்சியினைப் பதிவு செய்து ரூ. 8.3 பில்லியனை எட்டியுள்ளது. இது 4.3% ஆரோக்கியமான நிதியிடல் இலாபவரம்பினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானமும் வலுவான உத்வேகத்தைப் பதிவு செய்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27% வளர்ச்சியுடன் ரூ. 1.4 பில்லியனாகக் காணப்பட்டது. இதன் விளைவாக, மொத்த தொழிற்பாட்டு வருமானம் 16% ஆல் அதிகரித்து ரூ. 10.1 பில்லியனை எட்டியதுடன், நிகர தொழிற்பாட்டு வருமானம் 27% ஆல் உயர்ந்து, நிதியாண்டின் முடிவில் ரூ. 10.7 பில்லியனாகப் பதிவாகியுள்ளது. செலவுக் கட்டுப்பாட்டில் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதன் காரணமாக, அதன் தொழிற்பாட்டுத் திறன் மேலும் வலுவடைந்துள்ளது. இது 2024ஆம் ஆண்டில் 53% ஆக இருந்த வருமானத்திற்கான செலவு விகிதம், 51.8% ஆக மேம்பட்டிருப்பதன் மூலம் பிரதிபலிக்கின்றது. வங்கியின் இந்த வலுவான நிதிப் பயணத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அதன் மொத்த பரந்த வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 66% உயர்ந்த வளர்ச்சியுடன் ரூ. 2.9 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.

வளர்ச்சியை நோக்காகக் கொண்ட பொருளாதார சூழலில் இயங்குவதுடன், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் எனும் தேசிய பொருளாதாரத்தில் முக்கியமான துறையில் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, ஆண்டில் வாடிக்கையாளர் முற்பணங்கள் பிரிவில் 36% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 39.6 பில்லியன் வளர்ச்சியை எய்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, மொத்த முற்பணங்கள் ரூ. 150.9 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், மொத்த சொத்துகளின் 74% ஆக பதிவாகியிருந்தது. அதனூடாக பிரதான வங்கியியல் செயற்பாடுகளை துறையுடன் ஒன்றிணைத்து, தொழிற்துறையின் உயர்ந்த நிலையில் வங்கி தன்னை நிலைநிறுத்தியதுடன், அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் வங்கியியல் வழிமுறைக்கான தெளிவான எடுத்துக்காட்டாகவும் அமைந்திருந்தது.

வங்கியின் வினைத்திறனான இடர் முகாமைத்துவம் மற்றும் தனித்துவமான மக்கள்-நேய அணுகுமுறையிலான கடன் வழங்கல் தரநிலைகள் காரணமாக, முழு வங்கித்துறையிலும் மிகக்குறைந்த மட்டத்திலான 'நிலை 3' வலுவிழந்த நிதியிடல் விகிதமான 1.2% ஐப் பேணி, இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது. வங்கியின் வைப்புக்கள் ரூ. 18.0 பில்லியனால் அதிகரித்து ரூ. 172.0 பில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன், வங்கித்துறையில் சிறந்த மட்டமான 45%, CASA விகிதமும் பேணப்பட்டுள்ளது.

வங்கியின் மொத்தச் சொத்துக்கள் ரூ. 204.3 பில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன், இது இவ்வருடத்தில் 12% வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றது.

தொடர்ச்சியான இலாபமீட்டும் போக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், வங்கியின் சாதாரண பங்கு நிதியின் மீதான வருவாய் (ROE), 2024 நிதியாண்டில் காணப்பட்ட 8.0% இலிருந்து 10.4% ஆக உயர்வடைந்து, முதன்முறையாக இரட்டை இலக்கத்தை எட்டியிருந்தது. சொத்துக்கள் மீதான வருவாயும் (ROA) 1.6% இலிருந்து 2.1% ஆக அதிகரித்துள்ளமை, வருவாய் ஈட்டும் திறனின் மேம்பாட்டைப் பிரதிபலித்துள்ளது. வங்கியின் மூலதன நிலைப்பாடும் வலுவாகக் காணப்படுவதுடன், பொதுப் பங்குரிமை நிலை 1 விகிதம் 13.0% ஆகவும், மொத்த மூலதன விகிதம் 14.7% ஆகவும் பதிவாகியுள்ளன. இவை முறையே 7% மற்றும் 12.5% எனும் குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளை விடவும் மிக அதிகமாகக் காணப்பட்டதுடன், வங்கியின் நிதி உறுதிப்பாட்டையும் தாங்குதிறனையும் வெளிப்படுத்தியுள்ளன. 2025 நிதியாண்டின் இறுதியில் வங்கியின் திரள்வுத்தன்மை வலுவாகப் பேணப்பட்டுள்ளது. ரூபாய் மற்றும் அனைத்து நாணயங்களுக்குமான திரள்வுத்தன்மை விகிதங்கள் (LCR) முறையே 330.3% மற்றும் 231.5% ஆகவும், நிகர நிலையான நிதியிடல் விகிதம் (NSFR) 142.5% ஆகவும் பதிவாகியிருந்தன. இவை அனைத்தும் 100% எனும் குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவையை விடவும் மிக உயர்மட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டில், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு வலுவூட்டல், நிதிசார் உள்ளடக்கத்தை முன்னெடுத்தல், நிலைபேறாண்மையை ஊக்குவித்தல் மற்றும் அர்த்தமுள்ள சமூக பொறுப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்றன அடங்கலாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் வங்கி மேற்கொண்டிருந்த செயற்பாடுகளுக்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச கௌரவிப்புகளை வங்கி பெற்றிருந்தது. த ஏசியன் பாங்கரினால் உலகின் சிறந்த 50 வலிமையான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்தமைக்கு மேலதிகமாக, இதர குறிப்பிடத்தக்க கௌரவிப்புகளில், இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் (IsDB) 57 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய தனியார் துறைக்கான விருது விழாவில் “The Most Impactful ICD Investee Company” எனும் விருது, PwC நிறுவனத்தால் நடுவர் தீர்ப்பு வழங்கப்பட்ட “ICC Emerging Asia Banking Awards இல், “இலங்கையின் சிறந்த வங்கி” மற்றும் “சொத்து தரத்தில் சிறந்த செயல்பாடு” ஆகிய விருதுகள், மற்றும் 2025ஆம் ஆண்டிற்கான தெற்காசிய இஸ்லாமிய நிதி மன்றத்தின் (IFFSA) விருதுகளில் “தசாப்தத்தின் சிறந்த வங்கி” ஆகிய கௌரவங்களை வங்கி சுவீகரித்திருந்தது.

வங்கி தனது முதலீட்டுத் தரத்திலான நற்சான்றிதழ்களைத் தொடர்ந்து பேணியிருந்தது. ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இடமிருந்து Stable Outlook உடன் கூடிய BBB-(lka) தரப்படுத்தலையும், லங்கா ரேட்டிங் ஏஜென்சியிடமிருந்து Stable Outlook உடன் கூடிய BBB+ தரப்படுத்தலையும் வங்கி தக்கவைத்திருந்தது.

தனது பங்குதாரர்களுக்குப் பெறுமதியை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு, அமானா வங்கி தொடர்ச்சியாக 8ஆவது முறையாகவும் ஒரு பங்குக்கு 1.30 ரூபாய் எனும் இடைக்காலப் பங்கிலாபத்தை அறிவித்திருந்தது. இது 4.3% பங்கிலாப வருவாயையும், 29% வழங்கல் விகிதத்தையும் கொண்டுள்ளது. மேலும், வங்கியின் சீரான செயல்திறன் மற்றும் வளர்ச்சிப் பாதையை பிரதிபலிக்கும் வகையில், அதன் பங்கின் விலை 20% இற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டு, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட ரூ. 24.60 உடன் ஒப்பிடுகையில் இவ்வருட முடிவில் ஒரு பங்கு ரூ. 30.00 ஆகப் பதிவாகியுள்ளது.

வங்கியின் சிறந்த நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியின் பயணத்தில் 2025 ஆம் ஆண்டு என்பது முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமாக நினைவில் கொள்ளப்படும் — வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 4 பில்லியன் பெறுமதியை கடந்திருந்தமை மற்றும் இரட்டை இலக்க ROE ஐ எய்தியிருந்தமை ஆகியவற்றுக்காக மாத்திரமன்றி, எமது வியாபார மாதிரியின் வலிமை மற்றும் முதிர்ச்சித் தன்மையை வெளிப்படுத்தியிருந்தமைக்காகவாகும். எமது முன்னேற்றமானது ஸ்திரத்தன்மை, விவேகமான ஆளுமை மற்றும் நீண்டகாலப் பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றில் ஊன்றிய ஒரு மூலோபாயத்தைப் பிரதிபலிக்கின்றது. எமது பணிப்பாளர் சபையினருக்கும், ஷரிஆ மேற்பார்வைச் சபைக்கும், எமது முகாமைத்துவக் குழுவிற்கும் மற்றும் ஊழியர்களுக்கும் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டிற்காக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், எமது பயணத்தில் தொடர்ந்தும் விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் பயணிக்கும் எமது வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன். 2026 ஆம் ஆண்டில் எமது 15 ஆவது வருடச் செயற்பாட்டில் கால்பதிக்கும் வேளையில், எமது சேவையைப் பெறும் அனைவருக்கும் சிறந்த பெறுமதியைப் பெற்றுக்கொடுப்பதுடன், நிலையான வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் நாம் தொடர்ந்தும் உறுதியுடன் இருப்போம்.” என்றார்.

வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சந்தை நிலையை வலிமைப்படுத்தயிருந்தமை, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தியிருந்தமை, கடுமையான இடர் முகாமைத்துவ செயற்பாடுகளை உறுதி செய்திருந்தமை மற்றும் வங்கியினுள் தொழிற்பாட்டு சிறப்பை முன்னெடுத்திருந்தமை ஆகியவற்றினூடாக ஏற்படுத்தப்பட்டிருந்த தாக்கத்தை சாதனை மிகுந்த 2025 நிதிப் பெறுபேறுகளினூடாக பிரதிபலிக்க முடிந்துள்ளது. தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் மக்களுக்கு நட்பான மற்றும் அபிவிருத்தியை நோக்காக் கொண்ட வங்கியில் அனுபவத்தை ஏற்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் எம்மை அர்ப்பணித்துள்ளோம். அதனூடாக எமது வளர்ச்சிப் பயணம் தொடர்ந்தும் வலுப்பெறுகிறது. எமது அணுகுமுறையில் ஒழுக்கத்தையும், அதனைச் செயற்படுத்துவதில் உறுதித்தன்மையையும் கடைப்பிடிப்பதன் மூலம், வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக்கூடிய ஒரு வலுவான உத்வேகத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். எமது தவிசாளருக்கும், பணிப்பாளர் சபையினருக்கும் அவர்களது வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பிற்காகவும், ஷரிஆ மேற்பார்வைச் சபை உறுப்பினர்களுக்கு அவர்களது ஆலோசனைகளுக்காகவும், எமது நிர்வாக அணியினர் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களது அயராத உழைப்பிற்காக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், எமது பெறுமதிமிக்க பங்குதாரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எம்மீது வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கைக்காகவும் நன்றி கூறுகின்றேன். நாம் எமது பெறுமதி முன்மொழிவுகளை மேம்படுத்தி, எமது சேவை வலையமைப்பை விரிவுபடுத்தும் வேளையில், எமக்கு முன்னாலுள்ள வாய்ப்புகள் குறித்து மிகுந்த உற்சாகத்துடன் அவதானம் செலுத்துகிறோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

Image 1, Caption: தவிசாளர் – அஸ்கி அக்பராலி

Image 2, Caption: முகாமைத்துவ பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி – மொஹமட் அஸ்மீர்

Featured

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay
logo