எம் பாரிஸ் ஜஸீல் மற்றும் எம் எம் எஸ் குவைலித் ஆகியோருடன் சிரேஷ்ட உப தலைவராக அஜ்மல் நலீர் நியமனம்
பல்துறை அனுபவம் நிறைந்த வங்கியியல் நிபுணரான இம்தியாஸ் இக்பால் அவர்களை தனது பிரதம செயற்பாட்டு அதிகாரியாக (COO) அமானா வங்கி நியமித்துள்ளது. 2022 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் அமானா வங்கியில் இணைந்து கொண்ட இம்தியாஸ் இக்பால், செயற்பாடுகளுக்கான பிரதித் தலைவராக பணியாற்றியிருந்ததுடன், வங்கிச் செயற்பாடுகள், கிளைகள், SME வங்கியியல் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளுக்கான பொறுப்பை வகித்திருந்தார். பிரதம செயற்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வங்கியின் மனித வளங்கள், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயற்பாடுகளையும் மேற்பார்வை செய்வார்.
HSBC ஸ்ரீ லங்காவில் ஆரம்பித்திருந்த இம்தியாஸின் தொழில் வாழ்க்கையின் போது, கடன் இடர் முகாமைத்துவம், செயற்பாட்டு இடர், நிதி மோசடி இடர் முகாமைத்துவம், திரட்டல் மற்றும் மீட்டல் மற்றும் அட்டைச் செயற்பாடுகள் போன்ற பிரிவுகளின் மேற்பார்வையில் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் வெளிநாட்டு செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகளிலும் இவர் வெளிப்படுத்தப்பட்டிருந்தார். HSBC இல் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சொத்துகள் முகாமைத்துவம் போன்றவற்றில் வங்கியின் செயற்பாட்டு அதிகாரியாக இவர் பணியாற்றியிருந்ததுடன், 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வங்கியின் நிர்வாக குழுவில் இவர் அங்கம் வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து இம்தியாஸ் MBA பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், இலங்கை வங்கியியல் கல்வியகத்தின் நிபுணத்துவ தகைமையையும் கொண்டுள்ளார்.
வங்கியின் பிரதம இணக்கப்பாடு அதிகாரி அதிகாரியான அஜ்மல் நலீர் அவர்களை சிரேஷ்ட உப தலைவராக பதவி உயர்வு வழங்கியுள்ளதாகவும் அமானா வங்கி அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் வங்கியின் கடன் பிரிவின் உப தலைவராக அஜ்மல் நலீர் இணைந்து கொண்டார். பின்னர் பிரதம கடன் அதிகாரியாகவும், பிரதம இணக்கப்பாடு அதிகாரி அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார். 40 வருட காலப்பகுதிக்கு மேலான அனுபவத்தைக் கொண்ட வங்கியியல் நிபுணராக திகழும் அஜ்மல், 1982 ஆம் ஆண்டில் தனது வங்கியியல் துறை தொழில் வாழ்க்கையை HNB வங்கியில் ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டில் அபுதாபி கொமர்ஷல் வங்கியிலும், NBD எமிரேட்ஸ் வங்கியிலும் பணியாற்றியிருந்தார். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பணியாற்றிய 18 வருட காலப்பகுதியில், வங்கியின் முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம், கடன் மற்றும் விசேட சொத்துகள் முகாமைத்துவம், கடன் கட்டுப்பாடு மற்றும் உறவு பேண் முகாமைத்துவம் போன்றவற்றுக்கு அஜ்மல் வெளிப்படுத்தப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டில் இவர் MCB வங்கியின் இலங்கை அலுவலகத்தில் இணைந்து கொண்டார். அங்கு கடன் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றின் தலைமை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். உறுதியான கடன் மற்றும் இடர் மதிப்பாய்வு திறன்களை அஜ்மல் கொண்டுள்ளதுடன், கடன் இலாகா முகாமைத்துவத்திலும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். இலங்கை வங்கியியலாளர் கல்வியகத்தின் அங்கத்தவராகவும், ஐக்கிய இராஜ்ஜியத்தின் வங்கியியலாளர் பட்டயக் கல்வியகத்தின் அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றார்.
இந்த நியமனத்துடன், தற்போதைய சிரேஷ்ட உப தலைவர்களான எம் எம் எஸ் குவைலித் (பிரதம இடர் அதிகாரி) மற்றும் எம் பாரிஸ் ஜஸீல் (சிரேஷ்ட உப தலைவர் திறைசேரி மற்றும் நிதி நிறவனங்கள்) ஆகியோருடன் அஜ்மல் இணைந்துள்ளதுடன், வங்கியின் நிர்வாக குழுவிலும் அங்கம் பெறுகின்றார்.
புதிய நியமனங்கள் தொடர்பாக வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி இந்த அனுபவம் வாய்ந்த நான்கு வங்கியியலாளர்கள் பொறுப்பேற்றுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த காலங்களில் அவர்கள் தொடர்ச்சியாக உறுதியான வினைத்திறனையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் அமானா வங்கியின் நீண்ட கால தரப்படுத்தலை BB+(lka) உறுதியான தோற்றப்பாட்டுடன் வழங்கியிருந்தது. அமானா வங்கி வேறு எவ்வித துணை நிறுவனங்களையோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருக்கவில்லை.