• Amãna Bank PLC Blog Detail - Main Visual

வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உரிமை வழங்கல் தொடர்பில் அமானா வங்கி அறிவித்துள்ளது

அமானா வங்கி July 25, 2023

அமானா வங்கி பிஎல்சி ரூ. 6.7 பில்லியன் ரூபாயை பங்கு மூலதனமாக திரட்டுவதற்காக உரிமை வழங்கலை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வங்கியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிவித்தலில், வங்கி 2,902,267,365 சாதாரண வாக்களிப்பு பங்குகளை பங்கொன்றுக்கு ரூ. 2.30 வீதம் கொண்டிருக்கும் ஒரு பங்குக்கு ஒரு புதிய பங்கு எனும் விகிதாசார அடிப்படையில் வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த உரிமை வழங்கலுக்கு பங்குப் பரிவர்த்தனை மற்றும் பங்காளர்களின் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இந்த உரிமை வழங்கலினூடாக வங்கி தனது மூலதன இருப்பை ரூ. 20 பில்லியனுக்கும் உயர்வானதாக அதிகரிக்கும். அதேவேளை, ஒழுங்குபடுத்துனர்களின் தேவைப்பாட்டுக்கு அவசியமான காலப்பகுதிக்கு முன்னதாக, அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகள் கொண்டிருக்க வேண்டிய ஆகக்குறைந்த மூலதன தேவைப்பாட்டை வெற்றிகரமாக நிவர்த்தி செய்வதாக இது அமைந்திருக்கும். உத்தேசிக்கப்பட்டுள்ள மூலதன உள்ளீட்டினூடாக, வங்கியின் மூலதன போதுமை விகிதம் வலிமைப்படுத்தப்படுவதுடன், திட்டமிடப்பட்ட வளர்ச்சி மற்றும் விரிவாக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

அமானா வங்கியானது, மிகைக் கோரலுடனான ஆரம்ப பொதுப் பங்கு வழங்கலைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டது. கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் இதர பொருளாதார மற்றும் சமூக சவால்கள் நிலவிய காலப்பகுதியிலும், கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. இந்த உறுதியான நிதிப் பெறுபேறுகளின் காரணமாக, 2018 ஆம் ஆண்டு முதல் வங்கி தொடர்ச்சியாக 6 பங்கிலாபப் பிரகடனங்களை மேற்கொண்டிருந்தது. ரூ. 1.4 பில்லியனுக்கு அதிகமான தொகையை பங்கிலாபமாக வழங்கியிருந்தது. 2017 ஆம் ஆண்டிலும் வங்கி வெற்றிகரமாக உரிமை வழங்கலை முன்னெடுத்திருந்தது. அதன்போது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்களின் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டிருந்தமை காரணமாக இந்த உரிமை வழங்கலும் மிகைக் கோரலை பதிவு செய்திருந்தது.

2023 மார்ச் 31ஆம் திகதியன்று அமானா வங்கியின் பங்கொன்றின் மீதான தேறிய சொத்துப் பெறுமதி ரூ. 5.24 ஆக பதிவாகியிருந்தது. உரிமை வழங்கல் விலை 56% விலைக் கழிவுடன் ரூ. 2.30 ஆக அறிவித்திருந்ததனூடாக, கொள்வனவுக்கு கவர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.

உரிமை வழங்கல் தொடர்பாக அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “எமது மிக அண்மையில் வழங்கப்பட்ட உரிமை வழங்கலானது வங்கியின் வளர்ச்சிப் பாதைக்கான மூலோபாய முன்னெடுப்பொன்றாக அமைந்துள்ளது எனக்கூறுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம் எனவும், இம்முனைப்பானது எமது மூலதன இருப்பை வலிமைப்படுத்துவதுடன், உறுதியான வாய்ப்புகளை கையகப்படுத்துவதற்கு அவசியமான வழங்கலை கொண்டிருப்பதை உறுதி செய்வதுடன் எமது மதிப்புமிகு பங்குதாரர்களிற்கு தொடர்ச்சியான சிறந்த பெறுமதிகளை பெற்றுக் கொடுப்பதற்குமான எமது முயற்சியையும் வலுப்படுத்துகின்றது.” எனக்கூறினார்.

உரிமை வழங்கல் தொடர்பில் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “உரிமை வழங்கலினூடாக, வங்கிக்கு தனது பிரத்தியேகமான மற்றும் நாடு முழுவதுமான மக்களிற்கு விரிவாக்கம் செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள மூலதன உள்ளீட்டினூடாக, எமது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கப்படுவதுடன், எமது பிரதான வியாபாரத்தை விரிவாக்கம் செய்து, அதனூடாக எமது பங்காளர்களுக்கு வெகுமதிகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். எமது முன்னைய உரிமை வழங்கலைப் போன்று, எமது பங்காளர்கள் தொடர்ந்தும் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி மிகைக் கொள்வனவை பதிவு செய்து, எமது வெற்றிகரமான பயணத்தில் கைகோர்ப்பார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo