"சிறப்புக்கு வெகுமதியளித்தல்" எனும் தொனிப் பொருளின் கீழ் அமானா வங்கியில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் அஸ்கி அக்பரலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வைபவ ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் வங்கியின் ஸ்தாபக தலைவர் ஒஸ்மான் காசிம் அவர்களையும், ஸ்தாபக பணிப்பாளர்களான தையிப் அக்பரலி, ஹர்ஷ அமரசேகர பிசி மற்றும் மொஹமட் ஜஸ்ரி மக்தொன் இஸ்மாயில் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகியிருந்தது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் விதிமுறைகளின் பிரகாரம் வங்கியில் ஆகக் கூடியது 9 வருட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இவர்கள் திகழ்கின்றனர்.
இந்நிகழ்வில் வங்கியின் சிரேஷ்ட பணிப்பாளர் ரஜீவ் நந்தலால் திவிவெடி மற்றும் வங்கியின் பிரதான பங்குதாரர்களான IsDB குழுமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர்களான மொஹமட் அதாவுர் ரஹ்மான் சௌத்திரி மற்றும் சயிட் முஹம்மட் அசீம் ராஸா ஆகியோர் இந்நிகழ்வில் நேரடியாக பங்கேற்பதற்காக வெளிநாட்டிலிருந்து சமூகமளித்திருந்தனர். இதர பணிப்பாளர்களான ஆரன் ரஸல்-டேவிட்சன், ஒமர் காசிம், திஷான் சுபசிங்க, மொஹமட் ஆதமலி ஆகியோருடன், வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், முகாமைத்துவ குழு, கிளை முகாமையாளர்கள், விருதுக்கு பிரேரிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய வங்கி ஊழியர்கள் மெய்நிகர் கட்டமைப்பினூடாக கலந்து கொண்டனர்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கும் நிகழ்வில் பிரதான அம்சமாக, அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் வழமையான கடமைகளுக்கு அப்பால் செயலாற்றியிருந்த ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டிருந்தது. கடுமையான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டு பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுக்காக ஆறு ஊழியர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். 2022 ஆம் ஆண்டுக்கான அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெற்றியீட்டியவர்களில் மொஹமட் அஸ்மில் (முகாமையாளர் – கையகப்படுத்தல் சேனல்கள்), சமீர சேனநாயக்க (முகாமையாளர் – செயற்பாடுகள்), அஸீம் ராலி (சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல்கள் தலைமை அதிகாரி), நிசாத் முஸ்தபா (முகாமையாளர் – மென்பொருள் வடிவமைப்பு மற்றும் MIS), உதார கொடிப்பிலி (மேல் மாகாணத்தின் வளர்ந்து வரும் கூட்டாண்மைகள் – தலைமை அதிகாரி) மற்றும் அஸாம் அமீர் (கண்டி கிளை – வியாபார பிரிவின் தலைமை அதிகாரி) ஆகியோர் அடங்கியிருந்தனர். பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஏனைய ஊழியர்களில் ஆதில் ஹனீஃபா, அர்கம் அசீஸ், அஸ்லம் சஹாப்தீன், திலான் ஜோசப், பவாஸ் அன்சார், ஹரீந்திர மாரசிங்க, இம்ரான் ராசிக், முஷ்தாக் ஜிஃப்ரி, நதீக வீரசேகர, ராஸி ஜியாடோ, ரிஸ்னியா பாயிஸ், சஞ்ஜீவ பொன்சேகா மற்றும் ஷாகிர் நவாஸ் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
கிளைகளுக்கான விருதுகள் வழங்கலில் ஒட்டுமொத்த கிளைகளுக்கான விருதுகளின் தங்க விருதை நிந்தவூர் கிளை பெற்றுக் கொண்டது. இதனை, கிளை முகாமையாளர் மொஹமட் நபீல் பெற்றுக் கொண்டார். கண்டி கிளை வெள்ளி விருதை சுவீகரித்ததுடன், கண்டி கிளையின் வியாபார தலைமை அதிகாரி அசாம் அமீர் இவ் விருதினைப் பெற்றுக் கொண்டார். மத்திய பிராந்தியத்துக்கான தங்க விருதை குளியாப்பிட்டிய கிளை பெற்றுக் கொண்டது. இதனை கிளை முகாமையாளர் ஷிரான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டதுடன், வெள்ளி விருதை குருநாகல் கிளை பெற்றுக் கொண்டது. இதனை கிளை முகாமையாளர் ஹுஸைன் சம்சுதீன் பெற்றுக் கொண்டார். கிழக்குப் பிராந்தியத்தில் தங்க விருதை வங்கியின் சம்மாந்துறை கிளை வெற்றியீட்டியிருந்தது. கிளையின் முகாமையாளர் ஷிராஸ் மொஹமட் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். வெள்ளி விருதை கிண்ணியா கிளை பெற்றுக் கொண்டதுடன், கிளையின் முகாமையாளர் இம்ரான் பதூர்தீன் பெற்றுக் கொண்டார். மேல் மாகாண பிராந்தியத்தில் தங்க விருதை கொழும்பு 3 பிரதான கிளை பெற்றுக் கொண்டது. வெள்ளி விருது தெஹிவளை கிளைக்கு வழங்கப்பட்டது. பிரதான கிளையின் மொஹமட் ரிம்சான் மற்றும் தெஹிவளை கிளையின் இர்ஷாத் நஸீல் தமது கிளைகளுக்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
கூட்டாண்மை விவகாரங்களில் ஈடுபட்டுள்ள வங்கியின் உறவு பேண் முகாமையாளர்களை கௌரவிக்கும் வகையில், கூட்டாண்மை வாடிக்கையாளர் உறவு பேண் முகாமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. சிறந்த கூட்டாண்மை வாடிக்கையாளர் உறவு பேண் முகாமையாளருக்கான தங்க விருதை ஹரிந்திர மாரசிங்க வெற்றியீட்டியிருந்ததுடன், வெள்ளி விருதை ஜிஸ்தி மொஹமட் மற்றும் அஹமட் முஷ்தாக் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வு தொடர்பில் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளரை மையப்படுத்திய மற்றும் பெறுபேறுகள் அடிப்படையிலான கலாசாரத்துக்கான ஆதாரமாக அமானா வங்கியின் விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்திருப்பதுடன், சிறப்பாக செயலாற்றியவர்களை நாம் கௌரவித்துள்ளோம். அண்மைக் காலங்களில் வங்கி பல முக்கிய மைல்கல் சாதனைகளை பதிவு செய்திருந்ததை நாம் அவதானித்தோம். இவற்றில் எமது சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களின் ஈடுபாடு, பண்பு மற்றும் அர்ப்பணிப்பு போன்றன முக்கிய பங்காற்றியிருந்தன. வங்கிக்காக இவர்கள் உருவாக்கியிருந்த பெறுமதிக்காக அவர்களை கௌரவிப்பதாக இந்த விருதுகள் வழங்கல் அமைந்துள்ளது.” என்றார்.
வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியின் 2022 விருதுகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதையிட்டு நான் பெருமை கொள்கின்றேன். பல மைல்கல் சாதனைகளை எய்துவதற்கு ஏதுவாக இருந்த எமது ஊழியர்களின் சாதனைகளை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். சகல வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், அமானா வங்கியின் முழுக் குடும்பத்துக்கும் நல்வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் அமானா வங்கியின் நீண்ட கால தரப்படுத்தலை BB+(lka) உறுதியான தோற்றப்பாட்டுடன் வழங்கியிருந்தது. அமானா வங்கி வேறு எவ்வித துணை நிறுவனங்களையோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருக்கவில்லை.
Image 1: பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருது வெற்றியீட்டிய சமீர சேனாநாயக்க, நிசாத் முஸ்தபா, மொஹமட் அஸ்மில், அஸாம் அமீர், அசீம் ராலி மற்றும் உதார கொடிப்பில் ஆகியோர் பணிப்பாளர் சபைத் தலைவர் அஸ்கி அக்பரலி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் ஆகியோருடன் காணப்படுகின்றனர்.
Image 2: 2022 பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருது வெற்றியாளர்கள், இதற்கு முன்னைய ஆண்டுகளில் பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருது வெற்றியாளர்கள் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களுடன் காணப்படுகின்றனர்.
Image 3: கிளை விருதுகள் வெற்றியாளர்கள், பணிப்பாளர் சபை அங்கத்தவர்களுடன் காணப்படுகின்றனர்.
Image 4: வணிகப்பிரிவின் CRM விருது வெற்றியாளர்கள், பணிப்பாளர் சபை அங்கத்தவர்களுடன் காணப்படுகின்றனர்.
Image 5: ஸ்தாபக தலைவர் ஒஸ்மான் காசிம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தற்போதைய பணிப்பாளர் சபைத் தலைவர் அஸ்கி அக்பரலி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் ஆகியோரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படுகின்றார்.