சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களை (SME) ஊக்குவிப்பதற்கு தன்னை அர்ப்பணித்துள்ள அமானா வங்கி, தனது பிரத்தியேகமான சேவைக் கட்டமைப்பான அமானா வங்கி பிஸ்னஸ் ப்ளஸ் (Business Plus) ஊடாக, அக்குறணை பிரதேச செயலகம் மற்றும் கண்டி மாவட்ட செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து அபிமான SME விருதுகள் அறிமுக நிகழ்வை முன்னெடுத்திருந்தது. அபிமான SME விருதுகளினூடாக, பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கி, சிறப்பாக செயலாற்றியிருந்த சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். பாரிய, நடுத்தரளவு மற்றும் சிறிய தொழில் முயற்சியாளர்கள் என்ற மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டதுடன், பெண்கள் மற்றும் இளைஞர் தொழில் முயற்சியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அபிமான SME விருதுகள் 2022 நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, மாவட்ட செயலாளர் / கண்டி அரசாங்க அதிபர் சந்தன தென்னகோன், அக்குறணை பிரதேச செயலக செயலாளர் இந்திகா குமாரி அபேசிங்க, அமானா வங்கியின் கண்டி வியாபார தலைமை அதிகாரி (Head of Business) அசாம் அமீர், அமானா வங்கி அக்குறணை கிளை முகாமையாளர் மின்சார் ஹமீட், கண்டி மாவட்ட SME திணைக்கள அதிகாரிகள், அக்குறணை AGA அலுவலகம், பிராந்திய வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், அரசாங்க ஊழியர்கள், தொழில் முயற்சியாளர்கள், பாடசாலை மாணவர்கள், வியாபார சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் அங்கத்தவர்கள் என பலரும் பிராந்தியத்தின் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் சிறந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அபிமான SME விருதுகள் 2022 வெற்றியாளர்களில், ஆர்விஎஸ் புரொடக்ட்ஸ் (வெற்றியாளர் – சிறிய பிரிவு), அமரசேகர இன்டஸ்ட்ரீஸ் (இரண்டாமிடம் – சிறிய பிரிவு), அமோர் ஐஸ் கிறீம் (வெற்றியாளர் – நடுத்தரளவு பிரிவு), இசுர பத்திக் கிரியேஷன்ஸ் (இரண்டாமிடம் – நடுத்தரளவு பிரிவு), மிலானோ ஃபுட்ஸ் (வெற்றியாளர் – பாரிய பிரிவு), ஒன்லைன் காமென்ட்ஸ் (இரண்டாமிடம் – பாரிய பிரிவு), நியுசிஸ் சிலோன் (வளர்ந்து வரும் இளம் தொழில் முயற்சியாளர்), இமந்தி அந்தூரியம் (வளர்ந்து வரும் பெண் தொழில் முயற்சியாளர்) மற்றும் லெஸ்லி எதிரின்சிங்க (விசேட கௌரவிப்பு விருது) ஆகியோர் அடங்கியிருந்தனர். விசேட விருதுகள் வெற்றியாளர்களுக்கு மேலதிகமாக, 55 தொழில் முயற்சியாளர்களுக்கு கௌரவிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.
அபிமான SME விருதுகள் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது பிராந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர் பிரிவின் பங்களிப்பை கௌரவித்து வழங்கப்படும் சிறந்த கட்டமைப்பாக அபிமான SME விருதுகள் அமைந்துள்ளது. சகல விருது வெற்றியாளர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நெருக்கடியான சந்தைச் சூழ்நிலைகள் காணப்படுகின்ற போதிலும், தேசிய நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவளிப்பதில் அமானா வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பை நான் பெரிதும் வரவேற்பதுடன், பிராந்தியத்தின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவதில் அமானா வங்கியின் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.” என்றும் கூறினார்.
மாவட்ட செயலாளரும் கண்டி அரசாங்க அதிபருமான சந்தன தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில், “சகல வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அரசாங்க மற்றும் தனியார் துறையிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த அமானா வங்கி முன்வந்துள்ளமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என்றும் முழு நாட்டுக்கும் சிறந்த தகவலை இது வழங்குகின்றது என கூறினார். பிராந்தியத்தின் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு இது போன்ற செயற்பாடுகளினூடாக தொடர்ந்தும் ஆதரவளிக்கும் வகையில் அமானா வங்கியுடன் இணைந்து செயலாற்ற நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
விருது வழங்கும் நிகழ்வில் அமானா வங்கியின் கண்டி வியாபார தலைமை அதிகாரி அசாம் அமீர் கருத்துத் தெரிவிக்கையில், “தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவதற்கும், இலங்கையில் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் எமது அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இந்த விருதுக் கட்டமைப்பு அமைந்துள்ளது எனவும் எமது அர்ப்பணிப்பான மற்றும் பிரத்தியேகமான அமானா வங்கி பிஸ்னஸ் ப்ளஸ் சேவைக் கட்டமைப்பினூடாக, பிரத்தியேகமான உறவு பேண் முகாமையாளர், இருப்பிடத்துக்கு வருகை தரும் வங்கிச் சேவை, ஒன்லைன் வங்கிச் சேவை, ஊதிய கொடுப்பனவு பட்டியல் (Payroll) தீர்வுகள் போன்றவற்றுடன், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் பரந்தளவு நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யும் மூலதன செலவு நிதிவசதி, தொழிற்படு மூலதன நிதிவசதி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிதிவசதி, வர்த்தக சேவைகள், இயந்திர சாதன லீசிங், நிரந்தர மேலதிகப் பற்று வசதி, காசோலை விலைக்கழிவு, நிதி திரட்டல் மற்றும் முதலீடுகள் போன்ற பல சேவைகளை வழங்குகின்றோம் என கூறியதுடன் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் வெற்றிகரமான செயற்பாட்டை ஊக்குவிக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கையில் வியாபார கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் சேவை வழங்கல்களை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.