அமானா வங்கி 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இரட்டை இலக்கப் பெறுமதியில் வரிக்கு முந்திய இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலிலும், உறுதித்தன்மை மற்றும் மீண்டெழுந்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தி இந்த வளர்ச்சியை அமானா வங்கி எய்தியுள்ளது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலாண்டில், அமானா வங்கி 10% எனும் உயர் வரிக்கு முந்திய இலாபத்தை எய்தி ரூ. 423.5 மில்லியனைப் பதிவு செய்திருந்தது. இந்தப் பெறுமதி முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 385.8 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. உயர் வரிவிதிப்பனவு காரணமாக, வங்கியின் வரிச் செலவுகள் 50% அதிகரிப்பை பதிவு செய்திருந்த நிலையில், வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் 12% இனால் குறைந்து ரூ. 220.7 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 250.7 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கி தனது முதல் காலாண்டு பகுதியில் மொத்த வருமானமாக ரூ. 215.3 மில்லியனைப் பதிவு செய்திருந்தது. 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 177.8 மில்லியன் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் இது 21% வளர்ச்சியாகும்.
அனைத்து இலங்கையர்கள் மத்தியிலும் பிரத்தியேகமான மக்களுக்கு நட்பான வங்கி மாதிரிக்கான வரவேற்பு அதிகரித்துச் செல்வதை பிரதிபலிக்கும் வகையில், வங்கியின் மொத்த விற்பனைகள் சார் வருமானம் கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 2.21 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ. 4.41 பில்லியனாக இரட்டிப்புப் பெறுமதியால் வளர்ச்சியடைந்திருந்தது. நிதியை வினைத்திறனான வகையில் மீளமைத்திருந்தமை மற்றும் முற்பணங்கள் மற்றும் பொறுப்புகளை மீள்பெறுமதியிட்டிருந்தமை போன்றவற்றினூடாக, வங்கியின் நிதியளிப்பு எல்லைப் பெறுமதி 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவாகியிருந்த 3.6% வளர்ச்சியிலிருந்து 5.0% ஆக உயர்ந்திருந்தது. இதன் பெறுபேறாக, வங்கியின் தேறிய நிதிசார் வருமானம் 57% இனால் உயர்ந்து ரூ. 1.77 பில்லியனாக பதிவாகியிருந்தது.
வங்கி தொடர்ந்தும் தனது தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 115.9 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 114% வளர்ச்சியடைந்து ரூ. 248.0 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய வியாபார வருமானம் ரூ. 235.9 மில்லியனிலிருந்து ரூ. 247.5 மில்லியனாக உயர்ந்திருந்தது. இதன் பெறுபேறாக, வங்கியின் மொத்த தொழிற்படு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 56% இனால் அதிகரித்து ரூ. 2.28 பில்லியனாக பதிவாகியிருந்தது. பொருளாதார தாக்கங்களால் இலகுவில் பாதிப்புறக்கூடிய வியாபாரங்களினால் எழக்கூடிய இடர்களை தணிக்கும் வகையில் உயர்ந்தளவு மதிப்பிறக்க பெறுமதிகளை ஒதுக்கீடு செய்திருந்த போதிலும், வங்கியின் தேறிய தொழிற்படு வருமானம் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 1.22 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 27% இனால் அதிகரித்து ரூ. 1.55 பில்லியனாக பதிவாகியிருந்தது.
முதல் காலாண்டில் சாராசரி முதன்மை பணவீக்கம் 50% விட உயர்வாக பதிவாகியிருந்த சூழலில், வங்கியினால் தனது தொழிற்பாட்டு செலவீனங்களை 32% க்கு மட்டுப்படுத்திக் கொள்ள முடிந்திருந்தது. இதன் பெறுபேறாக, வங்கியினால் அதன் நிதிச் சேவைகளில் பெறுமதி சேர் வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி போன்றவற்றுக்கு முன்னதான தொழிற்படு இலாபத்தில் 21% வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்திருந்ததுடன், இது, முன்னைய ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 541.4 மில்லியனுடன் ஒப்பிடுகையில், ரூ. 656.0 மில்லியனாக உயர்ந்திருந்தது. வங்கியின் முதல் காலாண்டின் திரண்ட வரிப் பங்களிப்பு ரூ. 435.3 மில்லியனாக உயர்ந்திருந்ததுடன், வங்கியின் வரிக்கு முந்திய தொழிற்பாட்டு இலாபத்தின் 66% ஆக அமைந்திருந்தது.
திரள்வுச் சூழ்நிலைகள் மற்றும் சந்தையில் நிதிக்கான கடும் போட்டிகர நிலை காணப்பட்ட போதிலும், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வாடிக்கையாளர் வைப்புகள் 3% இனால் உயர்ந்து ரூ. 115.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. இதனூடாக, ஆரோக்கியமான CASA விகிதத்தை 41% ஆக பேணியிருந்தது. வாடிக்கையாளர் முற்பணங்களும் ரூ. 80.0 பில்லியனாக பதிவாகியிருந்தன.
உரிய காலப்பகுதியில் வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் வினைத்திறனான முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக, வங்கியின் நிலை 3 மதிப்பிறக்க நிதியளிப்பு விகிதத்தை 2.0% ஆக மேம்படுத்தியிருந்தது. இது, சந்தை சராசரிப் பெறுமதியை விட குறைவாக அமைந்திருந்தது. 2023 மார்ச் 31 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 143.0 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வங்கியின் மூலதன விகிதம் 15.6% ஆக பதிவாகியிருந்தது. இது, ஆகக்குறைந்த ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடான 12.5% விட உயர்வானதாகும்.
முதல் காலாண்டு நிதிப் பெறுபேறு தொடர்பில் தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “பல வெளிச் சவால்களை வங்கி வெற்றிகரமாக எதிர்கொண்டு, உறுதியான காலாண்டு நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. அதனூடாக 2023 ஆம் ஆண்டின் எஞ்சியிருக்கும் காலப்பகுதிக்கும் சிறந்த வளர்ச்சிக்கான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமது மீண்டெழுத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டினூடாக இவ்வாறான சிறந்த பெறுபேறுகளை எய்த பங்களிப்பு வழங்கிய நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.
அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது முதல் காலாண்டு நிதிப் பெறுபேறுகளினூடாக, சவால்கள் நிறைந்ததும், படிப்படியாக முன்னேற்றம் கண்டு வரும் பொருளாதாரச் சூழலில் வங்கியின் உறுதித் தன்மை மற்றும் மீண்டெழுந்திறன் ஆகியன பிரதிபலிக்கப்பட்டுள்ளன. சகல நிலைகளிலும் பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக மக்களுக்கு நட்பான வங்கித் தீர்வுகளுடன், டிஜிட்டல் மற்றும் பிராந்திய பிரசன்னத்தை விரிவாக்கம் செய்வதில் முதலீடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்கால வாய்ப்புகள் மற்றும் நிலைவரம் தொடர்பில் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளேன். எம்மீது தொடர்ச்சியாக நம்பிக்கை கொண்டுள்ளமைக்காக வாடிக்கையாளர்களுக்கும், சக பணிப்பாளர்கள், நிர்வாக அங்கத்தவர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குழு பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குழு ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
அமானா வங்கி, Orphan Careஇன் ஸ்தாபக நிறுவுனராக ஈடுபடுவதைத் தவிர, வேறு எந்த துணை நிறுவனங்களோ அல்லது இணை நிறுவனங்களோ கொண்டதில்லை.