• Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கி தொடர்ச்சியான 6ஆவது வருடாந்த பங்கிலாபத்தை 24% அதிகரிப்புடன் பிரகடனம் செய்துள்ளது

அமானா வங்கி June 21, 2023

அமானா வங்கி தொடர்ச்சியாக நேர்த்தியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனது தொடர்ச்சியான 6 ஆவது வருடாந்த பங்கிலாபப் பிரகடனத்தை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதனூடாக தனது பங்குதாரர்களுக்கு நீண்ட காலப் பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டு முதல் வங்கியின் பிரகடனம் செய்யப்பட்ட மொத்த பங்கிலாபப் பெறுமதி ரூ. 1.4 பில்லியனை விட உயர்வானதாக அமைந்துள்ளது.

பங்குதாரர்களுக்கு பங்கொன்றுக்கு ரூ. 0.12 வீதம் இடைக்கால மேலதிக பங்கிலாபத்தை வழங்கியிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் அமானா வங்கியின் பங்கிலாபக் கொடுப்பனவு பெறுமதியான ரூ. 334.1 மில்லியன், 2022 ஆம் ஆண்டில் பிரகடனம் செய்யப்பட்ட பங்கிலாபத்துடன் ஒப்பிடுகையில் 24% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

2023 ஆம் ஆண்டுக்கான மேலதிக பங்கிலாப வழங்கல் என்பது, இலங்கை மத்திய வங்கியினால் சகல வங்கிகளுக்கும் பணப் பங்கிலாபங்களை வழங்குவதை கட்டுப்படுத்தி வழங்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் அமைந்திருப்பதுடன், வங்கியில் கொண்டிருந்த ஒவ்வொரு சுமார் 23.5 பங்குகளுக்கு ஒரு பங்கு எனும் விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட்டது. அதன் பெறுமதி பங்கொன்றுக்கு ரூ. 2.40 ஆக அமைந்திருந்தது. மேலதிக பங்கிலாப வழங்கல் பூர்த்தியடைந்ததும், வங்கியின் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 118,317,854 இனால் அதிகரித்து 2,902,267,365 ஆகக் காணப்படும். இந்த வழங்கலின் பின்னர் மூலதனத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையின் பெறுமதி மீதான கணிப்பிடப்பட்ட பிடித்து வைத்திருக்கும் வரியின் (With Holding Tax) பெறுமதி ரூ. 284.0 மில்லியனாகும்.

பங்கிலாபப் பிரகடனம் தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் பொருளாதார சவால்கள் நிலவிய போதிலும் எமது தொடர்ச்சியான ஆறாவது பங்கிலாப பிரகடனத்தை வெளியிடுவது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது உறுதியான நிதிசார் செயற்பாடுகள், மீட்சியுடனான வியாபார மாதிரி மற்றும் பங்குதாரர்களுக்கு பெறுமதி சேர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த பங்கிலாபப் பிரகடனம் அமைந்துள்ளது.” என்றார்.

மேலும், வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பங்கிலாபப் பிரகடன அறிவிப்பு என்பதனூடாக எமது பங்குதாரர்களுக்கு தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வருமதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான எமது ஒப்பற்ற அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் எமது பங்கிலாபம் வழங்கும் பயணத்தை ஆரம்பித்திருந்த நிலையில், சவால்கள் நிறைந்த சந்தைச் சூழலில், எமது மீட்சியுடனான செயற்பாடுகளின் மூலம், பங்கிலாபக் கொடுப்பனவுகளை தொடர்ந்தும் விருத்தி செய்து கொள்ள முடிந்துள்ளது. வங்கி பல்வேறு துறைகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், எமது உறுதியான வினைத்திறனை பேணுவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எமது பங்குதாரர்களுக்கு தொடர்ச்சியான வெகுமதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

பங்கிலாபம் வழங்கலினூடாக, வங்கியின் துரிதமான நிதிசார் ஆரோக்கிய நிலை, வினைத்திறனான முகாமைத்துவம் மற்றும் முறையான இடர் செயன்முறைகள் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டில் வங்கியின் வரிக்கு முந்திய இலாபமான ரூ. 1.2 பில்லியனைப் பதிவு செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் வரிக்கு முந்திய இலாபமாக இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 423.5 மில்லியனை எய்தியிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo