• Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கியினால் மத்திய பிராந்தியத்தில் சிறிய நடுத்தரளவு தொழில்முனைவோருக்கான வியாபார அமர்வு முன்னெடுப்பு

அமானா வங்கி April 24, 2023

மத்திய பிராந்தியத்தில் சிறிய நடுத்தரளவு தொழில்முனைவோருக்கான வியாபார அமர்வை அமானா வங்கி அண்மையில் முன்னெடுத்திருந்தது. ‘Drive 2023’ எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வியாபார அமர்வினூடாக, தற்போதைய சவால்கள் நிறைந்த சூழலில் வியாபாரங்களுக்கு மீட்சிகரமான நிலையை எய்தி, உள்நாட்டு பொருளாதாரத்தை முன்நகர்த்த பங்களிப்பு வழங்கும் வகையிலான வியூகங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது.

மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தரளவு தொழில்முனைவோர் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களைச் சேர்ந்த பல வாடிக்கையாளர்கள் இந்த அமர்வில் பங்கேற்றிருந்தனர். இவர்களுக்கு அனுபவம் வாய்ந்த வளவாளர்கள் மற்றும் வங்கி முகாமைத்துவ குழு அங்கத்தவர்களிடமிருந்து பெறுமதி வாய்ந்த அனுபவ ரீதியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

இந்த அமர்வில் சிரேஷ்ட விரிவுரையாளரும், முகாமைத்துவ ஆலோசகருமான பஹ்மி பாரூக் கருத்துத் தெரிவிக்கையில், சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலிலும், காணப்படும் பெருமளவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தொழில்முயற்சிசார் வியாபாரங்கள் எவ்வாறு அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்பது தொடர்பான தமது அறிவைப் பகிர்ந்திருந்தார். வங்கியின் பிரதம இடர் அதிகாரி எம் எம் எஸ் குவைலித் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் ஆகியோரின் விளக்கவுரைகளும் தொடர்ந்து இடம்பெற்றன. வியாபாரங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முனைவோர் எதிர்நோக்கியிருந்த பெருமளவான சவால்கள் தொடர்பிலும், உள்ளடக்கமான வளர்ச்சி தொடர்பில் வங்கியினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பற்றிய விளக்கங்களுடனும் இந்த அமர்வு முடிவடைந்தது. இந்த நிகழ்வின் பேச்சாளர்களில் இம்தியாஸ் இக்பால் (பிரதம செயற்பாட்டு அதிகாரி), எம் எம் எஸ் குவைலித் (பிரதம இடர் அதிகாரி), சித்தீக் அக்பர் (உப தலைவர் – நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல்) மற்றும் இர்ஷாட் இக்பால் (உப தலைவர் – வணிக வங்கியியல்) ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இந்த அமர்வில், வங்கியின் சிறிய நடுத்தரளவு தொழில்முனைவோர் பிரிவின் தலைமை அதிகாரி அர்ஷாட் அத்னான், கண்டி கிளையின் வியாபார செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி அசாம் அமீர் மற்றும் மத்திய பிராந்திய கிளைகளின் முகாமையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வெற்றிகரமாக இடம்பெற்ற இந்த அமர்வு தொடர்பில் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “பொருளாதாரத்தின் உயிர்நாடியாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறை திகழ்வதுடன், அவற்றின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட்டு, திறன்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். மக்களுக்கு நட்பான வங்கி எனும் வகையில், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன், அதன் அங்கமாக 2023 வியாபார அமர்வை முன்னெடுத்திருந்தது. சிறந்த செயற்பாடுகள் மற்றும் இதர உள்ளார்ந்த தகவல்களை பகிர்ந்து கொண்டதுடன், வியாபாரங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முனைவோருக்கு இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலிருந்து மீண்டு வருவதற்கும், எதிர்காலத்தில் சிறந்த கூட்டாண்மை நிறுவனங்களாக திகழ்வதற்கும் அவசியமான ஆதரவை வழங்கியிருந்தோம்.” என்றார்.

சிறிய நடுத்தரளவு தொழில்முனைவோர் வங்கிச் சேவைகளை வலிமைப்படுத்தும் வகையில், அமானா வங்கியினால் அமானா வங்கி பிஸ்னஸ் ப்ளஸ் எனும் விசேட வங்கிச் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. பிரத்தியேகமான உறவுபேண் முகாமையாளர் மற்றும் இதர பல அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்கும் சேவைகளுடனான இந்த பிஸ்னஸ் ப்ளஸ் திட்டத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது நிதி தொடர்பில் மனநிம்மதியுடன் திகழ முடியும். அத்துடன், தமது வியாபாரத்தின் வளர்ச்சி தொடர்பில் அவர்களால் அதிகளவில் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும். சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் பரந்தளவு நிதித் தேவைகள் தொடர்பில் அமானா வங்கியினால், பரிபூரண தீர்வுகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், மூலதன செலவீன நிதியளிப்பு, தொழிற்படு மூலதன நிதியளிப்பு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிதியளிப்பு, வியாபார சேவைகள், இயந்திர மற்றும் சாதன குத்தகை வசதிகள், நிரந்தர மேலதிகப் பற்று வசதி, காசோலை விலைக்கழிவு மற்றும் நிதித் திரட்டல் மற்றும் முதலீடுகள் தொடர்பான தீர்வுகளும் வழங்கப்படுகின்றன.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo