• Amãna Bank PLC Blog Detail - Main Visual

விதுல்லங்காவின் நிலத்தில் பொருத்தப்பட்ட சூரிய மின்பிறப்பாக்கல் கட்டமைப்புக்கு அமானா வங்கி வலுவூட்டியது

ஊடக வெளியீடு July 27, 2023

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுத் துறையை கட்டியெழுப்புவதற்கான தனது பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், நாட்டில் சகாயமான மற்றும் தூய புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கலில் முன்னோடியாக அமைந்துள்ள விதுல்லங்கா பிஎல்சியினால் ஹொரண பகுதியில் நிலத்தில் பொருத்தப்பட்ட 2MW சூரிய மின்பிறப்பாக்கல் கட்டமைப்புக்கு அமானா வங்கி நிதிவசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. வருடாந்தம் 3.9GWh வலுப்பிறப்பாக்கலை மேற்கொள்ளும் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த சூரிய மின்பிறப்பாக்கல் கட்டமைப்பு, 2023 ஜுன் 9 ஆம் திகதி வைபவ ரீதியான தேசிய மின்விநியோகக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் பொறியியலாளர். ரொஹான் செனெவிரட்ன, இலங்கை புதுப்பிக்கத்தக்க வலு அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் ரஞ்சித் சேபால, அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் மற்றும் விதுல்லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் சங்கானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டம் தொடர்பாக அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “ஹொரண சூரிய வலுப் பிறப்பாக்கல் ஆலையை நிறுவுவதற்காக விதுல்லங்கா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளமையானது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், நிலைபேறான செயற்திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வதனூடாக, காபன் சமநிலைப்படுத்தப்பட்ட மற்றும் இயற்கைக்கு நட்பான நாளைய இலங்கையை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். எமது வங்கியின் மாதிரியும், இது போன்ற நிலைபேறான தாக்கங்களைக் கொண்ட திட்டங்களுக்கு நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஊக்கமளிப்பதாக அமைந்திருப்பதுடன், மின்-நீர் மின் உற்பத்தி ஆலைகள், பயோ-மாஸ் மின்பிறப்பாக்கல் ஆலைகள் மற்றும் பாரியளவிலான தொழிற்துறைசார் கூரைமீது நிறுவப்பட்ட சூரிய மின்பிறப்பாக்கல் திட்டங்கள், நிலத்தில் பொருத்தப்பட்ட சூரிய மின்பிறப்பாக்கல் திட்டங்கள், பிளாஸ்ரிக் கழிவு மீள்சுழற்சி திட்டங்கள் மற்றும் நிலைபேறான நீரியல் வளத் திட்டங்கள் போன்ற பல திட்டங்களுக்கும் நாம் நிதிவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். விதுல்லங்காவுடன் இணைந்து, பசுமையான மற்றும் நிலைபேறான எதிர்காலத்துக்காக நிலைத்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்த நாம் முயற்சி செய்கின்றோம்.” என்றார்.

விதுல்லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் சங்கானி கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியை எமது நிதிப் பங்காளராக இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். நாட்டில் காணப்படும் பெருவாரியான இயற்கை புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களை பயன்படுத்தும் எமது திட்டத்தை ஊக்குவிப்பதாக அமானா வங்கி திகழ்கின்றது. அவர்களுடனான பிரத்தியேகமான பங்காண்மை அடிப்படையிலான வங்கியியல் மாதிரி என்பது, நாம் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருப்பதுடன், தேசத்தின் காபன் வெளியீட்டை குறைக்கும் வகையில் நாம் செயலாற்றுவதால் வங்கியின் இடர் ஒதுக்கமும் திருப்திகரமானதாக அமைந்துள்ளது.” என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மற்றும் மின்சார சபை அதிகாரிகளின் பிரகாரம், இலங்கை மின்சார சபையின் “சூரிய பல சங்கரமனய கட்டம் 3” என்பதன் கீழ் 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 150 MW புதுப்பிக்கத்தக்க வலு திறனுக்கான விலைமனுக்கோரலை வெற்றிகரமாக சமர்ப்பித்து, அதிகரித்துச் சென்ற செலவீனங்களுக்கு மத்தியிலும் திட்டத்தை முறையாக பூர்த்தி செய்வதில் பங்களிப்பு வழங்கும் ஒரே நிறுவனமாக விதுல்லங்கா திகழ்கின்றமை அறிய முடிந்தது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

படத்தின் தலைப்பு - அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன, இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் ரஞ்சித் சேபால, அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் மற்றும் விதுல்லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் சங்கானி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo