இலங்கையின் அதிகளவு விருதுகளை வென்ற நிறுவனங்கள் வரிசையில் அமானா வங்கி 11 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. இதனூடாக இலங்கையில் இயங்கும் அதிகளவு விருதுகளைப் பெற்ற வங்கிகளில் ஒன்றாக தனது நிலையை மேலும் அமானா வங்கி உறுதி செய்துள்ளது. LMD சஞ்சிகையினால் இந்த தரப்படுத்தல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெற்றுக் கொண்ட விருதுகளின் எண்ணிக்கையின் பிரகாரம் சிறந்த 50 நிறுவனங்களை தெரிவு செய்து தரப்படுத்தி கௌரவித்திருந்தது.
இந்த கௌரவிப்பு தொடர்பில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “தமது நிறுவனங்களுக்கு மாத்திரமன்றி, சர்வதேச விருதுகளை வென்று முழு நாட்டுக்கும் பெருமை சேர்த்த முன்னணி நிறுவனங்கள் வரிசையில் நாம் உள்ளடங்கியிருப்பதையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றோம். வங்கி வெற்றியீட்டியிருந்த இந்த பல்வேறு விருதுகளினூடாக, எமது மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளின் மீது காணப்படும் நாட்டம் அதிகரித்துச் செல்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்மீது வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் ஊழியர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.
தரப்படுத்தல் மேற்கொள்வதற்கான மதிப்பீடுகளை முன்னெடுத்த காலப்பகுதியில், அமானா வங்கி 16 விருதுகளை சுவீகரித்திருந்தது. இதில் சர்வதேச கௌரவிப்புகளான குளோபல் ஃபினான்ஸ் சஞ்சிகை, த பாங்கர் சஞ்சிகை, குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் ரிவியு சஞ்சிகை, தெற்காசிய இஸ்லாமிய நிதியியல் அமர்வு போன்றவற்றுடன், இலங்கையில் வழங்கப்பட்ட விருதுகளான KPMG Sri Lanka (SLIBFI விருதுகள்) CIM Sri Lanka (SLIBFI சந்தைப்படுத்தல் விருது), Lanka Clear (LankaPay Technovation விருதுகள்) மற்றும் LMD ஆகியனவும் அடங்கியிருந்தன. மீளாய்வு காலப்பகுதியில், ஓமானில் இடம்பெற்ற இஸ்லாமிய நுகர்வோர் வங்கியியல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான OrphanCare க்கு, ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்பு வாய்ந்த வங்கி எனவும் அமானா வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. SLIBFI விருதுகள் 2020 இலும் சிறந்த சமூக மேம்பாட்டுத் திட்டம் என்பதற்கான தங்க விருதையும் இது வெற்றியீட்டியிருந்தது. மேலும் IFFSA விருதுகள் 2020 இல் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு திட்டத்துக்கான தங்க விருதையும் வெற்றியீட்டியிருந்தது. 2020 நவம்பர் மாதத்தில், வேர்ள்ட் HRD காங்கிரசினால் “இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம்” எனும் கௌரவிப்பையும் பெற்றுக் கொண்டது.
கடந்த காலங்களில் அமானா வங்கி பெற்றுக் கொண்ட பல்வேறு சர்வதேச விருதுகளில், “ஆண்டின் சிறந்த உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கி” எனும் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டமையானது, வங்கிக்கு மாத்திரமன்றி, முழு நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் வட்டியற்ற வங்கி முறை மற்றும் மக்கள் நட்புரிய வங்கி முறையை பின்பற்றி செயலாற்றும் இலங்கையின் முதலாவதும் ஒரே அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சியை செயற்படுத்துவது மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டுவது எனும் நோக்கத்துடன், வங்கி தனது பரந்த கிளை வலையமைப்பு மற்றும் சுய வங்கிச் சுவை நிலையங்கள் போன்றவற்றினூடாகவும், பண மீளப் பெறுகைகளை இலகுவாக மேற்கொள்வதற்காக 4500க்கும் அதிகமான ATMகளையும் கொண்டிருப்பதுடன், உடனடி பண வைப்புகளுக்காக 850க்கும் அதிகமான Pay&Go களையும் கொண்டு, வாடிக்கையாளர்களை சென்றடைகின்றது. இணைய மற்றும் மொபைல் வங்கியியல் சேவைகள், 24x7 பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேகமான வங்கி அலகுகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர் மேலும் பல அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவெ தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.