ஐக்கிய இராஜ்ஜியத்தின் அதிகளவு புகழ்பெற்ற குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் ரிவியு சஞ்சிகையினூடாக இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் வங்கியாக அமானா வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டில் மொத்த சொத்துகளில் 16% வளர்ச்சியை பதிவு செய்திருந்த அமானா வங்கி, ரூ. 100 பில்லியன் எனும் இலக்கை சாதனை மிகுந்த காலப்பகுதியில் எய்திருந்தது. இதனூடாக இலங்கையின் உறுதியான முன்னேற்றத்தைப் பதிவு செய்யும் வங்கிகளில் ஒன்று எனும் தனது ஸ்திரத்தன்மையை மேலும் பேணியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில், மொத்த சொத்துக்களின் பெறுமதி 9% இனால் அதிகரித்து ரூ. 108.7 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வரிக்கு முந்திய இலாபம் 100%க்கும் அதிகமாக பதிவாகி ரூ. 506.8 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2020 முதல் அரையாண்டு காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 250.5 மில்லியனாக காணப்பட்டது.
இந்த கௌரவிப்பு தொடர்பில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் தலைசிறந்த குளோபல் பாங்கிங் மற்றும் ஃபினான்ஸ் ரவியு ஊடாக இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் வங்கியாக நாம் தெரிவாகியுள்ளமை உண்மையில் பெரும் கௌரவிப்பாக அமைந்துள்ளது. இலங்கையில் நிலவும் அதிகளவு போட்டிகரத் தன்மை வாய்ந்த வங்கியியல் துறையில் எமது நிலையை உறுதியாக பேண முடிந்துள்ளது. கடந்த சில வருடங்களில் நாம் பதிவு செய்திருந்த எமது வினைத்திறனான செயற்பாட்டை, சிறந்த வகையில் இந்த கௌரவிப்பு வெளிப்படுத்துவதுடன், பல சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து, அவற்றிலிருந்து உறுதியாக மீண்டெழுவதற்கு இது உதவியாக அமைந்திருந்தது. வங்கி 10 வருட பூர்த்தியை கொண்டாடியிருந்த சூழலில், வங்கியின் பரந்த ஏற்றுக் கொள்ளல் மற்றும் அதன் பிரத்தியேகமான மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரிக்கு குறுகிய காலப்பகுதியில் கிடைத்துள்ள வரவேற்பு போன்றவற்றுக்கு இந்த கௌரவிப்பு மேலும் வலுச் சேர்த்துள்ளது. எமது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்காளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் போன்ற சகலரும் எம்மீது தொடர்ச்சியாக கொண்டுள்ள நம்பிக்கைக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்றார்.
அமானா வங்கி பெற்றுக் கொண்டுள்ள கௌரவிப்புகளில் மேலும் உள்ளடக்கமாக, குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் ரிவியுவில், இலங்கையிலுள்ள சிறந்த வெளிநாட்டவரின் வங்கி (Best Expat Bank in Sri Lanka) எனவும் அதன் விசேட வங்கியியல் பிரிவான வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் ‘Expat Gold’ என்பதற்காக வழங்கப்பட்டிருந்தது. மேலும், அதன் சிறந்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான ‘OrphanCare’ இற்கு இலங்கையில் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு வங்கியாகவும் கௌரவிக்கப்பட்டிருந்தது.
உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் மக்களுக்கு நட்பான வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள இலங்கையின் முதலாவது மற்றும் ஒரே அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சி மற்றும் வாழ்வுக்கு வளமூட்டுவது எனும் நோக்கத்தின் பிரகாரம், வாடிக்கையாளர்களை வங்கி சென்றடைவதுடன், அதற்காக தனது வளர்ந்து வரும் கிளை வலையமைப்பு மற்றும் சுய வங்கிச் சேவை அலகுகளை பயன்படுத்துகின்றது. மேலும் வங்கியினால் நாடு முழுவதையும் சேர்ந்த 4500 க்கு அதிகமான ATMகளை அணுகக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், 850 க்கு அதிகமான Pay&Go Kioskகளை பயன்படுத்தி பண வைப்புகளை மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இணைய மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள், 24x7பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேகமான வங்கி அலகுகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை அனுபவிக்க முடியும்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.