2020 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் அமானா வங்கிஇ வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 389 மில்லியனையும், வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 250 மில்லியனையும் பதிவு செய்துள்ளது. முன்னைய காலாண்டுஇ முதல் அலை கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாம் காலாண்டில் தனது இலாபத்தை இரண்டு மடங்காக அதிகரித்திருந்தது. குறிப்பாக வரிக்கு முந்திய இலாபம் இரண்டாம் அரையாண்டில் ரூ. 70 மில்லியனாக பதிவாகியிருந்த நிலையில், மூன்றாம் காலாண்டில் ரூ. 139 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதேபோன்று வரிக்கு பிந்திய இலாபம் இரண்டாம் அரையாண்டில் ரூ. 41 மில்லியனாக பதிவாகியிருந்த நிலையில், மூன்றாம் காலாண்டில் ரூ. 80 மில்லியனாக பதிவாகியிருந்தது.
நிதியியல் வலிமை, உறுதித்தன்மை மற்றும் மீளெழுச்சியை வங்கி வெளிப்படுத்தி முதல் ஒன்பது மாதங்களில் உறுதியான 80 மில்லியன் ரூபாய் வாடிக்கையாளர் வைப்புகளை பதிவு செய்திருந்தது. இது 12% அதிகரிப்பாகும். அதுபோன்று CASA விகிதம் 43% ஆக அதிகரித்திருந்ததுடன், இது வங்கித் துறையில் பதிவாகியிருந்த உயர் CASA விகிதங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 95 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 2019 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த பெறுமதியை விட 10% அதிகரிப்பாகும். சவால்கள் நிறைந்த சந்தைச் சூழல்களின் பின்புலத்தில், கடன் இடர் கூறுகளை வலிமைப்படுத்தியிருந்ததனூடாக, முற்பணங்கள் 3% இனால் அதிகரித்து ரூ. 60 பில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கி தொடர்ச்சியாக ஆரோக்கியமான சொத்து ஒதுக்கப்பிரிவுகளை பேணியிருந்தது. தொழிற்படா விகிதங்கள் துறையின் சராசரி பெறுமதிகளைவிட மிகவும் குறைவான பெறுமதிகளைக் கொண்டிருந்தன. தேறிய தொழிற்படா முற்பணங்கள் (Net NPA) 1.7% மற்றும் நிகர தொழிற்படா முற்பணங்கள் (Gross NPA) 4.1ம% ஆக பதிவாகியிருந்தன. 2020 ஆம் ஆண்டுக்கான வங்கியின் மூன்றாம் காலாண்டு மொத்த வருமானம் 191 மில்லியன் ரூபாயாக அதிகரித்திருந்தது. இது 2019 மூன்றாம் காலாண்டு பதிவாகியிருந்த 140 மில்லியன் ரூபாய் மொத்த வருமானப் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 37 சதவீத அதிகரிப்பாகும்.
குறித்த காலாண்டில் வங்கி தனது 3ஆவது தொடர்ச்சியான வருடாந்த பங்கிலாப வழங்கல் பற்றி அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இம்முறை பண பங்கிலாபத்துக்கு மாறாக, மாற்றீட்ருப் வழங்கல் அடிப்படையிலான பங்கிலாபமாக அமைந்திருந்தது. இதன் காரணமாக வங்கியின் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 2.6 பில்லியனாக அதிகரித்திருந்தது. இதனூடாக வங்கியின் பங்கொன்றின் தேறிய சொத்துப் பெறுமதி ரூ. 4.70 ஆக பதிவாகியிருந்தது. வங்கியின் நிலையை வளர்ந்து வரும் நிலையான நிறுவனம் எனும் நிலைக்கு உயர்த்தியிருந்தது. 2020 ஒக்டோபர் மாதம் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் சிறி லங்கா வெளியிட்டிருந்த தரப்படுத்தலில் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலை BB+(lka) என உறுதி செய்திருந்தது.
வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “பிரதான வங்கிச் செயற்பாடுகளினூடாக எமது பெறுபேறுகள் முன்னேற்றமடைந்துள்ளதைக் காண்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், கோவிட் தொற்றுப் பரவலின் தாக்கம் சகல பிரிவுகளிலும், துறைகளிலும் தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலிலும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களில் கவனம் செலுத்துவதனூடாக இந்த காலப்பகுதியை கடந்து செல்லக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
தொற்றுப் பரவலின் போது, சிறு, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களை பெருமளவு இலக்காகக் கொண்டு இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதார மீட்சிக்கு உதவும் நிவாரணத்திட்டத்தின் பிரகாரம், சௌபாக்யா திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காக பிரத்தியேகமான அலகொன்றை அமானா வங்கி நிறுவியிருந்தது. இந்த செயன்முறையில், 5000 க்கும் அதிகமான நிவாரண கோரிக்கைகளை வங்கி ஏற்றுக் கொண்டதுடன், 180 க்கும் அதிகமான சௌபாக்யா விண்ணப்பங்களை ஆராய்ந்து, தொழிற்படு மூலதன உதவியை நாடியிருந்த சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வாடிக்கையாளர்களுக்கு 1.8 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை பகிர்ந்தளித்திருந்தது.
இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (ISDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் உரிமம் கொண்டுள்ளது. ISDB குழுமம் என்பது ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கிக்கு எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் கிடையாது. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான அனாதை பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ மாத்திரமே பேணி வருகின்றது.