அமானா வங்கியின் 12ஆவது வருடாந்த பொது ஒன்றுகூடல் (AGM), கொவிட்-19 தொற்றுப் பரவலுடன், அரசாங்கத்தின் விதிமுறைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வழிகாட்டல்களுக்கமைய ஒரு டிஜிட்டல் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டில் வருடாந்த ஒன்றுகூடல்களை டிஜிட்டல் முறையில் ஏற்பாடு செய்திருந்த முதல் சில நிறுவனங்கள் வரிசையில் அமானா வங்கியும் அடங்கியிருந்ததுடன், கடந்த ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்ட 11 ஆவது வருடாந்த பொது ஒன்றுகூடல் நிகழ்வும், அசாதாரண பொது ஒன்றுகூடலும் டிஜிட்டல் நிகழ்வுகளாக இடம்பெற்றன.
2021 ஏப்ரல் 23ஆம் திகதி இந்த வருடாந்த பொது ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றதுடன், இது சகல பங்குபற்றுநர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. வங்கியின் கூட்டாண்மை தலைமையகத்தில் அமைந்துள்ள அலுவலக பணிப்பாளர் சபை அறையிலிருந்து வெர்ச்சுவல் அப்ளிகேஷன் ஊடாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன், இதில் வங்கியின் பணிப்பாளர் சபையின் தலைவர் அஸ்கி அக்பரலி, பணிப்பாளர்களான பிரதீப் தில்ஷான் ரஜீவ ஹெட்டியாரச்சி, ஆரொன் ரஸல் டேவிசன், மொஹமட் ஆதமலி, திஷான் சுபசிங்க, பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் மற்றும் வங்கியின் நிர்வாகக் குழுவின் அங்கத்தவர்களும் பங்கேற்றிருந்ததுடன், வங்கியின் வெளிநாட்டு பணிப்பாளர்களான ரஜீவ நந்லால் திவிவேதி, மொஹமட் அதாவுர் ரஹ்மான் சௌத்ரி, சயித் முஹம்மத் ஆசிம் ராஸா, கைருல் முஸம்மில் பெரேரா மற்றும் போல் மேர்சர் ஆகியோர் தமது இருப்பிடங்களிலிருந்து இணையத்தின் வாயிலாக இணைந்து கொண்டனர். டிஜிட்டல் கட்டமைப்பினூடாக இணைத்துக் கொள்ளப்பட்ட பங்காளர்கள் இந்த சந்திப்பில் உத்வேகத்துடன் பங்களிப்பு வழங்குவதற்கு ஊக்குவிக்கப்பட்டிருந்தனர். இதர பிரதான பங்காளர்களான வங்கியின் வெளியக கணக்காய்வாளர்களான ஏர்னஸ்ட் அன்ட் யங் (EY) போன்றவர்களும் பங்கேற்றிருந்தனர்.
வங்கியின் டிஜிட்டல் வருடாந்த பொது ஒன்றுகூடல் தொடர்பில் பணிப்பாளர் சபையின் தலைவர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “புதிய வழமையின் அங்கமாக வெர்ச்சுவல் சந்திப்புகள் அமைந்துள்ளதுடன், மீண்டும் ஒரு தடவை எமது வருடாந்த பொது ஒன்றுகூடலை டிஜிட்டல் நிகழ்வாக வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். குறிப்பாக, நாட்டில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படும் ஒரு சூழ்நிலையில் இந்த நிகழ்வை டிஜிட்டல் நிகழ்வாக முன்னெடுக்க முடிந்தமையையிட்டு திருப்தியடைகின்றோம். எம்முடன் ஒன்லைன் ஊடாக இணைந்து தமது கருத்துக்களையும், பங்களிப்புகளையும் மேற்கொண்டு இந்த சந்திப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களிப்பு வழங்கிய பங்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.