• Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியனையும், தொழிற்படு இலாபம் ரூ. 1 பில்லியனையும் தாண்டியது

Amãna Bank February 24, 2021

அமானா வங்கி, தனது துரித வளர்ச்சிக்கு சான்று பகிரும் மைல்கல்லாக, வங்கித் தொழிற்பாடுகளில் 9 வருடத்தை மாத்திரம் நிறைவு செய்த நிலையில் 2020ம் நிதியாண்டுடில் மொத்த சொத்துகளில் ரூ. 100 பில்லியன் தாண்டியது. கொவிட்-19 தொற்றுப் பரவலுடனான சவால் நிலைக்கு முகங்கொடுத்த போதிலும், 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உறுதியான மீட்சியை வங்கி பதிவு செய்திருந்ததுடன், நான்காம் காலாண்டில் 51% வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 372.1 மில்லியனை பதிவு செய்திருந்தது. 2019 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தப் பெறுமதி ரூ. 242.2 மில்லியனாக பதிவாகியிருந்தது. இக்காலப்பகுதியில் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 213.3 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நான்காம் காலாண்டில் வங்கியின் வரிக்கு முந்திய மற்றும் வரிக்கு பிந்திய இலாபங்கள் முறையே 168% மற்றும் 167% வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. வங்கியின் நான்காம் காலாண்டு பெறுபேறுகள் உயர்வடைந்திருந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில், மொத்தமாக ரூ. 761.4 மில்லியன் ரூபாயை வரிக்கு முந்திய இலாபமாகவும், வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 463.7 மில்லியன் ரூபாயையும் பதிவு செய்திருந்தது. 2019 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 460.9 மில்லியனுடன் ஒப்பிடுகையில், 2020 இல் வரிக்கு பிந்திய இலாபம் அதிகரித்திருந்தமை விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.

3.7% எனும் ஆரோக்கியமான நிதியீட்டு அளவுப் பெறுமதியைப் பேணியிருந்ததுடன், வங்கியின் நிகர நிதியீட்டு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9% இனால் அதிகரித்து ரூ. 3.45 பில்லியனாக பதிவாகியிருந்தது. நான்காம் காலாண்டில் மாத்திரம் இந்தப் பெறுமதி ரூ. 1.13 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2019 நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 53% வளர்ச்சியாகும். வர்த்தகத்துடன் தொடர்புடைய கட்டண வருமானத்தில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், 2020 நிதியாண்டில் நிகர தொழிற்பாட்டு வருமானமாக ரூ. 3.72 பில்லியன் ரூபாயை வங்கி பதிவு செய்திருந்தது. கிரயக்;கொள்ளடக்கம் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்ததனூடாக, தொழிற்படு செலவுகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியிருந்ததுடன், வங்கியின் VAT, NBT மற்றும் DRL ஆகிய வரிகளுக்கு முன்னரான தொழிற்படு இலாபம் ரூ. 1.15 பில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் திரண்ட வரிப் பங்களிப்பாக ரூ. 691 மில்லியன் பதிவாகியிருந்தது. இது வங்கியின் வரிக்கு முன்னரான தொழிற்படு இலாபத்தின் 60% ஆக பதிவாகியிருந்தது.

சவால்கள் நிறைந்த சந்தை மற்றும் பொருளாதார சூழ்நிலைகளிலும், வாடிக்கையாளர் வைப்புகளில் வங்கி தொடர்ச்சியாக நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததுடன், 83.6 பில்லியன் ரூபாயை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீத அதிகரிப்பாகும். இந்த வளர்ச்சியுடன், வங்கியின் CASA விகிதம் 2019 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த 39% இலிருந்து 2020 ஆம் ஆண்டின் நிறைவில் 45% ஆக அதிகரித்திருந்தது. CASA பெறுமதியை ஊக்குவிப்பதற்கு வங்கி வருடம் முழுவதிலும் அதிகளவு அக்கறையை செலுத்தியிருந்தமைக்கான சான்றாகும்.

நிதியியல் வசதிக்கான கேள்வி மந்த நிலையில் காணப்பட்ட போதிலும், வாடிக்கையாளர் முற்பணங்கள் பிரிவு, 2020 ஆம் ஆண்டில், நாட்டின் தனியார் துறை கடன் வளர்ச்சியை விட கூடுதலாகவும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வங்கி 8% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இந்தப் பெறுமதி ரூ. 62.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. மோசமான சந்தை சூழ்நிலையின் போதும், வங்கியின் தொடர்ச்சியான துல்லியமான இலாகா முகாமைத்துவம் மற்றும் உரிய காலப்பகுதியில் வாடிக்கையாளர் ஈடுபாட்டுடன் தொழிற்படா சொத்துக்கள் (NPA) பெறுமதியை துறையின் சராசரியை விட குறைவாக பேணக்கூடியதாக இருந்தது. தேறிய NPA மற்றும் நிகர NPA விகிதங்கள் போன்றன முறையே 1.4% மற்றும் 4.0% பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. வங்கியின் மூலத் திட்டத்தின் வினைத்திறனான நடைமுறைப்படுத்தல் மற்றும் உறுதியான ஐந்தொகை வளர்ச்சி ஆகியவற்றுடன், வங்கியின் மொத்த சொத்துக்கள் பெறுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% இனால் அதிகரித்து 100.2 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

ஆரோக்கியமான நிதியியல் கோவையுடன், வங்கி தொடர்ந்து தனது பங்கிலாபப் பயணத்தை 2020 ஆம் ஆண்டு முழுவதிலும் சீராக பேணியிருந்தது. தனது 3ஆவது தொடர்ச்சியான பங்கிலாபத்தை வழங்கி, வங்கியின் மீது பங்குதாரர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்மதிப்பளித்திருந்தது. இந்தக் கொடுப்பனவு ஒதுக்கீட்டு பங்கிலாபம் எனும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலுக்கமைவாக வழங்கப்பட்டிருந்தது. வங்கியின் மொத்த மூலதன விகிதம் 2020 டிசம்பர் 31ஆம் திகதியன்று ஆரோக்கியமான 17.4% ஆக பதிவாகியிருந்தது. இது ஆகக்குறைந்த தேவைப்பாடுகளை விட மிகவும் மேன்மையானதாக அமைந்திருந்தது.

2020 ஜுன் மாதத்தில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் அமைப்பினால் இலங்கையின் தேசிய தரப்படுத்தலுக்கமைய, அமானா வங்கியின் கடன் தரப்படுத்தலும் BB(lka) இலிருந்து BB+(lka) ஆக உறுதியான தோற்றப்பாட்டுக்கு மேம்படுத்தப்பட்டது. 2020 ஒக்டோபர் மாதம் ஃபிட்ச் முன்னெடுத்திருந்த பிந்திய மீளாய்வில் இது மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் அமானா வங்கியின் பணிப்பாளர் சபையின் தலைவர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “2020 ஆம் ஆண்டில் நாம் எதிர்நோக்கியிருந்த நெருக்கடியான பொருளாதார சூழலிலும், அமானா வங்கி ஆரோக்கியமான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. எமது வியாபார கட்டமைப்பு, ஐந்தொகை மற்றும் உறுதியான மூலதன நிலை ஆகியவற்றின் காரணமாக இந்தப் பெறுபேறுகளை எய்த முடிந்தது. எமது சக பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், அண்மையில் ஓய்வு பெற்ற ஸ்தாபக தலைவர் ஒஸ்மான் காசிம் மற்றும் இதர ஓய்வு பெற்ற பணிப்பாளர்கள், சிரேஷ்ட முகாமைத்துவ குழு மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் காரணமாக இந்த பெறுபேறுகளை பதிவு செய்ய முடிந்தது. நான் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.  பொது மக்களுக்கு உரிய காலப்பகுதியில் நிவாரணங்களை வழங்கியிருந்தமைக்காக இலங்கை மத்திய வங்கிக்கு நன்றி தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களை மீளக் கட்டியெழுப்ப வழங்கியிருந்த பெறுமதி வாய்ந்த பங்களிப்பு, வங்கிகளின் திரவத்; தன்மையை மேம்படுத்த மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் இதர பல நேர்த்தியான பணிகளினூடாக 2020 ஆம் ஆண்டை எம்மால் வெற்றிகரமாக கடந்து செல்ல முடிந்தது.  தொற்றுப் பரவல் காணப்பட்ட போதிலும், சமூகத்துக்கான எமது அர்ப்பணிப்பு நின்றுவிடவில்லை. OrphanCare திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டில் நான்கு சுற்று நிதிப் பகிர்ந்தளிப்புகளை வழங்கியிருந்தது. இதனூடாக நாடு முழுவதையும் சேர்ந்த சுமார் 2800 க்கும் அதிகமான அநாதரவான சிறுவர்களுக்கு பயன் பெற்றனர். இதற்காக எமது சுயாதீன நம்பிக்கை காப்பாளர் சபை அங்கத்தவர்கள், நன்கொடை வழங்குநர்கள் மற்றும் பங்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எமது கணக்காய்வாளர்களான Ernst & Young நிறுவனத்துக்கும், எம்மீது நம்பிக்கை கொண்டு செயலாற்றிய நலன் விரும்பிகளுக்கும் நன்றி கூறுகின்றேன்.” என்றார்.

வங்கியின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்கள், வியாபாரங்கள், சமூகங்கள் மற்றும் தேசத்துக்கு எவ்வேளையிலும் உதவிகளை வழங்கும் வங்கியின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கு இந்தத் தொற்றுப் பரவல் வாய்ப்பை வழங்கியிருந்தது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்தப் பணிகளை நிறைவேற்றுவதில் எமது சுறுசுறுப்பான ஊழியர் அயராது பணியாற்றியிருந்தனர். இவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். எமது மீட்சிக்கான செயற்பாட்டில் அடித்தளமாக அமைந்திருந்த எமது பணிப்பாளர்கள், பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த கைகோர்த்து செயலாற்றியிருந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். அவ்வாறான மீட்சியுடன், 2021 ஆம் ஆண்டில் எழக்கூடிய வாய்ப்புகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு அமானா வங்கி தயாராகவுள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் AAA’ தரப்படுத்தப்பட்ட, 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதி நிறுவனமாகும். அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’  நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo