ஆண்டின் சிறந்த நிதிப் பேரம் பரிமாற்றத்துக்கான தங்க விருதை அமானா வங்கி சுவீகரித்துள்ளது. அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த SLIBFI விருதுகள் 2021 நிகழ்வில் இந்த விருதை அமானா வங்கி பெற்றுக் கொண்டது. தனியார் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் Fits Aviation நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு நிதி வழங்கியிருந்தமைக்காக வங்கி இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை UTO EduConsult ஏற்பாடு செய்திருந்ததுடன், KPMG மத்தியஸ்தம் வகித்திருந்தது.
நிறுவனத்தின் நீண்ட கால நிதியளிப்பு மற்றும் தொழிற்படு மூலதன தேவைப்பாடுகளை மீளமைப்பதற்கு வங்கியினால் நிதி வழங்கப்பட்டிருந்ததுடன், புதிதாக A320-200 விமானத்துக்கு குத்தகை எடுப்பதற்கான நிதி வசதிகளையும் வங்கி ஏற்படுத்தியிருந்தது.
இந்த விருதை சுவீகரித்தமை தொடர்பில் வணிக வங்கியியலின் உப தலைவர் இர்ஷாத் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “ஆண்டின் சிறந்த நிதிப் பரிமாற்றத்துக்கான விருதை வெற்றியீட்டியுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். பாரியளவு திட்டங்களுக்கு எமது வட்டியில்லாத நிதியளிப்பு முறை எவ்வாறு பொருத்தமானதாக அமைந்துள்ளது என்பதை உறுதி செய்வதாக இது அமைந்துள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிப்பது தொடர்பில் நாடு அதிகளவு கவனம் செலுத்தும் காலப்பகுதியில், Fits Aviation உடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். உள்நாட்டு தொழிற்துறைகளுக்கு அவற்றின் ஏற்றுமதித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நம்பிக்கையான ஆகாய சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குகின்றது. குறிப்பாக சர்வதேச விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், இலகுவில் பழுதடையும் பொருட்கள் போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்கின்றது. தடுப்பூசிகள், மருந்துப் பொருட்கள், பாதுகாப்பு அங்கிகள் மற்றும் அத்தியாவசிய சேவைத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களை அழைத்துவருவதில் Fits Aviation முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. குறிப்பாக, சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையாக Fits Aviation இனால் யாழ்ப்பாணத்துக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகின்றன.” என்றார்.
Fits Aviation இன் விமான சேவைகள் FitsAir எனும் நாமத்தில் முன்னெடுக்கப்படுவதுடன், இலங்கையின் விமான தொழிற்துறையில் முன்னோடியாக அமைந்துள்ளது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் சர்வதேச சரக்கு கையாளல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட அங்கீகாரம் பெற்ற முதலாவது தனியார் விமான சேவை வழங்குநராகவும் திகழ்கின்றது. மேலும், இலங்கை முதலீட்டு சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிறுவனமாக Fits Aviation திகழ்வதுடன், தற்போது தன்வசம் ஒரு Air Bus A320-200, ஒரு ATR-72, இரண்டு Cessna 208 மற்றும் இரண்டு Cessna 152 விமானங்களைக் கொண்டுள்ளது. இவற்றை அனுபவம் வாய்ந்த உள்நாட்டு விமானிகள் மற்றும் பணியாளர்கள் இயக்குகின்றனர். பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலே, துபாய், சிங்கப்பூர், இந்தோனேசியா, நைரோபி, பங்களுர், கொச்சி, திருவனந்தபுரம், சென்னை, யாங்கூன் மற்றும் சைகொன் ஆகிய பகுதிகளுக்கு சரக்கு விமான சேவைகளை மேற்கொள்கின்றது. தனது இரண்டாவது A320-200 விமானத்தை அறிமுகம் செய்த பின்னர் இந்த பயணப் பகுதிகளை விஸ்தரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளுக்கு உள்நாட்டு பயணிகள் விமான சேவைகளை தனது ATR-72 விமானங்களைப் பயன்படுத்தி விரைவில் ஆரம்பிக்கவுள்ளதுடன், தனது Cessna 208 விமானங்களினூடாக இணைப்பு சேவைகள், காட்சி பார்வையிடல் சேவைகள் மற்றும் ஆகாய சாகச பயணங்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சிறியளவிலான செயற்பாட்டாளர்கள் மத்தியில் முன்னோடியான சேவை வழங்குநர் எனும் வகையில், இரத்மலானை மற்றும் யாழ்ப்பாண விமான நிலையங்களிலிருந்து சர்வதேச பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஆண்டின் சிறந்த நிதிப் பரிமாற்றத்துக்கான விருதை சுவீகரித்திருந்தமைக்கு மேலதிகமாக, ஆண்டின் சிறந்த நிறுவனத்துக்கான தங்க விருது மற்றும் ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் திட்டத்துக்கான விருது போன்றவற்றை பத்தாவது வருடமாகவும் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வில் அமானா வங்கி சுவீகரித்திருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் ஃபிட்ச் ரேட்டிங் ஸ்ரீ லங்காவினால் BB+ (lka) உறுதியான தோற்றப்பாட்டை கொண்டுள்ளதாக தரப்படுத்தியிருந்தது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.