அமானா வங்கி, இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைந்து அப்பல்கலைக்கழகத்தின் கணக்கீடு மற்றும் நிதியியல் துறையைச் சேர்ந்த பட்டப்படிப்பு மாணவர்களுக்காக நிதியியல் அறிவூட்டும் செயலமர்வொன்றை 2026 செப்டம்பர் 14 ஆம் திகதி நடாத்தியது. மாணவர்களின் நிதி முகாமைத்துவம், தெளிவுபடுத்தப்பட்ட நிதித் தீர்மானங்களை எடுத்தல் மற்றும் பொறுப்புமிக்க நிதி நடைமுறைகள் குறித்த புரிதலை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களின் தனிப்பட்ட மற்றும் எதிர்கால தொழில்முறை வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறை அறிவையும் இது வழங்கியது.
வங்கியின் இந்நிதியியல் அறிவூட்டல் முயற்சி, நிதியியல் ரீதியில் விழிப்புணர்வைக் கொண்ட இலங்கையை உருவாக்கும் இலக்குடன் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் மூலோபாயத்தின் (NFIS) கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கை மத்திய வங்கியின் இலங்கைக்கான நிதியியல் அறிவு வழிகாட்டல் வரைபடம் 2024–2028 (Financial Literacy Roadmap of Sri Lanka 2024–2028) திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன், இத்திட்டம் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு (UNSDGs) பங்களிப்பதுடன், பரந்த அளவிலான உள்ளடக்கிய மற்றும் நிலையான சமூக-பொருளாதார வளர்ச்சிக்குமான முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கின்றது.
இந் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் கணக்கீடு மற்றும் நிதியியல் பிரிவின் துறைத் தலைவர் பேராசிரியர் ஜே. சந்தியா குமாரி கருத்துத் தெரிவிக்கையில், “எமது பட்டப்படிப்பு மாணவர்களுக்கு நிதியியல் அறிவைக் கொண்டு சேர்ப்பதில் அமானா வங்கி எடுத்துள்ள இம்முயற்சியை நாம் பெரிதும் பாராட்டுகிறோம். இதுபோன்ற திட்டங்கள் மாணவர்களின் கல்வியை மேலும் வலுப்படுத்தும் நடைமுறை நிதி அறிவை வழங்குவதுடன், தெளிவுபடுத்தப்பட்ட நிதித் தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்களைத் தயார்படுத்துகின்றன. அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூக மேம்பாட்டிற்காக அமானா வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இத்திட்டம் வெளிப்படுத்துகின்றது. இத்திட்டத்தை எமது மாணவர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் மதிப்புமிக்க கற்றல் அனுபவமாக மாற்றியமைக்காக அமானா வங்கிக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வங்கியின் தனித்துவமான வட்டிசாரா வங்கி முறைமை குறித்து அறிந்து கொள்வதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தோம்.” என்றார்.
இந்தத் திட்டம் தொடர்பில் அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது அறிவுசார் சந்தைப்படுத்தல் முயற்சியின் ஊடாக நிதியியல் அறிவை மேம்படுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன், பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நடைமுறை நிதி அறிவூட்டி அவர்களை வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தி, சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்குமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். தனிநபர்கள் தங்களின் நிதிச் செயல்பாடுகளை நம்பிக்கையுடனும் தெளிவான நோக்கத்துடனும் முன்னெடுத்துச் செல்வதற்கு வழிவகுக்கும் திட்டங்களுக்குத் தலைமை தாங்குவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இத்திட்டங்களின் மூலம், மனிதர்கள் சரியான நிதித் தீர்மானங்களை எடுக்க ஊக்குவிப்பதுடன், அவர்களின் இலட்சியங்களுக்கு ஆதரவளித்து பொருளாதார நலனை மேம்படுத்துகிறோம். அதேவேளை, அபிவிருத்தியை மையமாகக் கொண்ட எமது தனித்துவமான மக்கள் நட்பான வங்கி முறைமையின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வையும் அதிகரித்து வருகிறோம்.” என்றார்.
வங்கியின் இந்நிதியியல் அறிவூட்டல் திட்டம், இலங்கையின் முன்னணி சமூக மேம்பாட்டு முயற்சியாக தேசிய மற்றும் சர்வதேச விருதுகளில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இத்திட்டம் IFFSA Awards 2025 நிகழ்வில் இலங்கையின் சிறந்த சமூக மேம்பாட்டுத் திட்டமாக தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், SLIBFI Awards 2026 நிகழ்விலும் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், அமானா வங்கி 60 நிதியியல் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தியுள்ளதுடன், ஆறு மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 6,000 பயனாளர்களைச் சென்றடைந்துள்ளது. பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக பட்டப்படிப்பு மாணவர்கள், பெண் தொழில்முனைவோர்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர், கூட்டாண்மை ஊழியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இத்திட்டங்களில் உள்வாங்கப்பட்டிருந்தனர். இந்நடவடிக்கைகளானவை, நிதியியல் உள்ளடக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், நிதியியல் ரீதியில் விழிப்புணர்வும் அதிகாரமளிப்பும் கொண்ட இலங்கைச் சமூகத்தை உருவாக்குவதற்குமான வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கி, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
Image 1 caption:- இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திக் கணக்கீடு மற்றும் நிதியியல் பிரிவின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், அமானா வங்கி பிஎல்சியின் பிரதிநிதிகளுடன் காணப்படுகின்றனர்.
Image 2 caption:-அறிவுசார் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி மூஆத் முபாறக் நிகழ்வை முன்னெடுக்கின்றார்.